தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் குறிப்பிட்ட தூரம் வரை வணிகர்களால் பெரும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் இவற்றை அகற்றும் பணியில்


திருப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் குறிப்பிட்ட தூரம் வரை வணிகர்களால் பெரும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் இவற்றை அகற்றும் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டது.
காரைக்கால் பகுதி திருப்பட்டினத்தில் பேருந்து நிறுத்தம் முதல் ஸ்ரீஐநூற்று விநாயகர் கோயில் வரை சுமார் 300 மீட்டர் தூரம் வணிகர்களால் தேசிய நெடுஞ்சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்புகள் அகற்றி, கழிவுநீர் செல்லும் வகையில் சாக்கடை கட்டித்தருமாறும் நுகர்வோர் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இப்பகுதியில் இருவழி போக்குவரத்துள்ள நிலையில், சாலை மிகவும் குறுகியுள்ளதாகவும், இதனால் விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சைக்கிளில் சென்றவர் இந்த நெருக்கடியில் சிக்கி, பேருந்து சக்கரத்தில் தலை நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்துக்குப் பின், இந்த கோரிக்கை தீவிரமாகியுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி முடிந்த பின், சாலையை அகலப்படுத்த பொதுப்பணித் துறை நிர்வாகம் சிறப்பு கவனம்  செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம், அரசு நிர்வாகத்துக்கு சொந்தமான நிலப் பகுதியை அளந்து குறியீடு செய்திருந்தது. இதுதொடர்பாக வணிகர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தன. எனினும் வணிகர்கள் தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ராமகிருஷ்ணன் தலைமையில் பஞ்சாயத்து நிர்வாகத்தினர், தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் மாரிமுத்து மேற்பார்வையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் குறிப்பிட்ட தூரம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
இப்பணி குறித்து ஆணையர் கூறியது: சாலையில் குறிப்பிட்ட தூரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக சில இடங்களில் பணி மேற்கொள்ளப்படும். இப்பணிக்குப் பின்னரே சாக்கடை கட்டுவதற்கான திட்டமிடலில் ஈடுபட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com