ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றக் கட்டடம்: புதுச்சேரி தலைமை நீதிபதி ஆய்வு

காரைக்காலில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணந்த நீதிமன்றக் கட்டடத்தை புதுச்சேரி தலைமை நீதிபதி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 


காரைக்காலில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணந்த நீதிமன்றக் கட்டடத்தை புதுச்சேரி தலைமை நீதிபதி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
காரைக்காலில் பிரெஞ்சு நிர்வாகத்தின்போது கட்டப்பட்ட கட்டத்தில் நீதிமன்றம் தற்போது  இயங்கி வருகிறது. இந்தக் கட்டடம் பழுதானதையடுத்து, புதிதாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட  வலியுறுத்தப்பட்டதன்பேரில், புதுச்சேரி அரசு, காரைக்கால் புறவழிச்சாலை பகுதியில் போக்குவரத்து துறைக்கு ஆர்ஜிதம் செய்திருந்த நிலத்தில், நீதிமன்ற வளாகத்திற்கு 6 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது.  
இதில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்புகள் கட்டுமானப் பணி கடந்த 2015-ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது.  நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்புகள், வழக்குரைஞர்கள் சங்க அலுவலகக் கட்டடம், பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடந்து முடிந்துள்ளன.  
நீதிமன்றக் கட்டடத்தில் தற்போது ஃபர்னிச்சர் அமைப்புப் பணிகள் நடந்துவருகிறது. இந்நிலையில் புதுச்சேரி தலைமை நீதிபதி பி.தனபால் கட்டடத்தை நேரில் ஆய்வு செய்ய காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்தார். மாவட்ட நீதிபதி எஸ். கார்த்திகேயன், குடும்ப நல நீதிபதி எஸ். சிவகடாட்சம், மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜாவுடன் நீதிமன்ற புதிய கட்டடத்துக்குச் சென்று கட்டுமானத்தையும், நீதிபதி குடியிருப்பு வளாகத்தையும், நீதிமன்ற உள்வளாக வேலைப்பாடுகளையும் பார்வையிட்டார்.
எல்லா பிரிவு கட்டுமானமும் ஏறக்குறைய முடிந்துவிட்டன. தற்போது கட்டடத்தினுள் நீதிபதி இருக்கை, தடுப்புகள், விசாரணைக் கூண்டு, இருக்கைகள் உள்ளிட்ட ஃபர்னிச்சர் அமைப்புப் பணிகள் நடந்துவருகின்றன என்ற விளக்கத்தை பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஜி.பக்கிரிசாமி, உதவிப் பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் நீதிபதிக்கு விளக்கிக் கூறினர். இருக்கைகள் அமைப்பு உள்ளிட்ட சிலவற்றில் சில மாற்றங்களை செய்யுமாறு தலைமை நீதிபதி பொதுப்பணித் துறையினருக்கு ஆலோசனை வழங்கினார். 
மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தினார். ஆய்வைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. விரிவான நிலப்பரப்பு கொண்டதாக நீதிமன்ற வளாகம் உள்ள நிலையில், நிழல் தரும் பல்வேறு வகை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பொதுப்பணித் துறை சார்பில் செய்யவேண்டிய பணிகள் நிறைவடைய மேலும் ஒரு மாத காலமாகுமெனக் கூறப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற அளவில் நீதிபதிகள் வந்து இறுதிக்கட்ட ஆய்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 
இந்தப் பணிகள் யாவும் நிறைவடைந்து, நீதித்துறையினர், ஆட்சியாளர்கள் பங்கேற்புடன் திறப்பு விழா செய்யப்படுமென தெரிவிக்கப்படுகிறது. நவம்பரில் திறப்பு விழா இருக்கும், தவறும்பட்சத்தில் ஜனவரி மாதம் நிச்சயம் திறப்பு விழா நடக்குமென கூறப்படுகிறது. மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பன்வால் மற்றும் வழக்குரைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com