ஜிப்மர் நிர்வாகம் வசமுள்ள வாய்க்கால்களை முறைப்படுத்த வலியுறுத்தல்

காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கட்டுமானம் செய்யப்படும் நிலப்பரப்பில் உள்ள வாய்க்கால்களை முறைப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.


காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கட்டுமானம் செய்யப்படும் நிலப்பரப்பில் உள்ள வாய்க்கால்களை முறைப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம், மாவட்ட ஆட்சியர் ஏ.விக்ரந்த் ராஜாவை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பார்வதீசுவரசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஜிப்மர் நிர்வாகம் வாங்கி கல்லூரி கட்டுமானத்தை தொடங்கியுள்ளது. இந்த பகுதியில் சாகுபடி செய்யும் வகையிலும், வெள்ள நீர் வடியும் வகையிலும் திட்டமிடப்பட்டு பழங்காலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாய்க்கால்கள், முறையாகப் பராமரிப்பின்றி உள்ளன. பிள்ளைத் தெருவாசல் கலுங்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் காரைக்கால் வாய்க்கால் வடிகாலாக பயன்படுகிறது. இதிலிருந்து அண்ணுசாமி வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இவை பெரும்பாலான பகுதியிலிருந்து வரும் நீரை வடியச் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. தற்போது, இவை அடைப்பட்டுக் காணப்படுகின்றன. ஜிப்மர் நிர்வாகமும், பொதுப்பணித்துறை நிர்வாகமும் இதை சீரமைக்க முன்வரவேண்டும்.
காரைக்கால் வாய்க்காலில் இருந்து கும்சம் வாய்க்கால் ஜிப்மர் கட்டடத்தின் அருகே பிரிகிறது. இது அடைப்பட்டுப்போனால், வெள்ளக் காலங்களில் கும்சம்கட்டளை, பெரியார் நகர் முதல் தெற்கே உள்ள காரைக்காலின் முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாகிவிடும். எனவே, இந்த வாய்க்காலை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தலத்தெரு வாய்க்காலில் இருந்து பிரிந்து டோபி கானாவிற்கு மேற்கில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் சிறு வாய்க்கால், அண்ணுசாமிப்பிள்ளை வாய்க்காலில் சென்று சேர்கிறது. இதனையும் தூர்வாரி முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். 
மேற்கு புறவழிச்சாலையையொட்டி வெட்டுப்பட்டான் வாய்க்கால், கூழையாறு என்ற பெயரில் பெரிய வடிகலாக உள்ளது. இது ஜிப்மர் நிலப்பரப்பின் வழியே கிழக்கு நோக்கி வருகிறது. இது பார்வதீசுவரசுவாமி கோயில் குளத்துக்கு தண்ணீர் பாய்ச்சக்கூடியதாகவும் உள்ளது. இந்த வாய்க்கால் பகுதியில் முறையாக கரைகள் கட்டப்படவேண்டும்.
பார்வதீசுவரர் கோயிலில் பிரசித்திப்பெற்றது சூரிய பூஜை. சிவலிங்கத்தின்மீது சூரியக் கதிர் விழும் வகையில் விழா நடைபெறுகிறது. எனவே, சூரியக் கதிரை தடுக்காத வகையில் ஜிப்மர் கட்டடம் அமைய ஏற்பாடு செய்யவேண்டும்.
இக்கோயிலில் விதைத்தெளி உத்ஸவம் நடத்தப்படுகிறது. இந்த இடமும் ஜிப்மர் நிர்வாகத்தின் வசம் உள்ளது. இந்தப் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டுமானத்தை ஜிப்மர் தொடங்கியுள்ளது. 100 குழி அளவுள்ள விழா நடைபெறுமிடத்தில் கட்டுமானம் செய்யப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உத்ஸவம் நடைபெற ஏதுவாக இந்த நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஜிப்மர் ஒப்படைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
காரைக்காலில் பல வாய்க்கால்கள், குளங்களை தூர்வாரி சீர்படுத்தும் மாவட்ட ஆட்சியரின் முயற்சி பாராட்டுக்குரியது. மேற்கூரிய நீர்நிலைகளையும் முறைப்படுத்திட சிறப்பு 
நடவடிக்கை எடுத்தால், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் காரைக்கால் நகரம் வெள்ளத்தில் சிக்காமல் மக்கள் காக்கப்படுவார்கள் என அதில் 
கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com