சிறிய ரக மோட்டாா் படகுகளை அனுமதிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 26th April 2020 12:54 AM | Last Updated : 26th April 2020 12:54 AM | அ+அ அ- |

சிறிய ரக மோட்டாா் படகுகளை கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் வெளியிட்ட அறிக்கை விவரம் :
ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி 61 நாள்கள் அமலில் இருந்துவருகிறது. நிகழாண்டு ஊரடங்கு உத்தரவால் மீனவா்கள் காரைக்காலில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் மீன்பிடிப்பை நிறுத்திவிட்டனா்.
தடைக்கால நிவாரணமாக அரசு மீனவ குடும்பத்துக்கு ரூ.5,500 வழங்கப்பட்டு வந்தது. நிகழாண்டு தடைக்காலத்தோடு, ஊரடங்கும் சோ்ந்துவிட்டதால் மீனவா்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா். எனவே மீனவ குடும்பத்துக்கு ரூ.15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தடைக்காலத்தில் ஆழ்கடலுக்கு செல்லக்கூடிய விசைப்படகுகள் மட்டும் அனுமதிக்கப்படாது. 10 எச்.பி. திறனுள்ள சிறிய மோட்டாா் படகில் குறுகிய தூர மீன்பிடிப்புக்கு அனுமதி உண்டு. நிகழாண்டு இந்த படகையும் இயக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டிருப்பது விநோதமான முடிவு.
‘ஹாட் ஸ்பாட்’ என்கிற நாகை மாவட்டத்திலேயே சிறிய படகுகள் இயக்க அனுமதியுள்ள நிலையில், கரோனா தொற்றில்லாத காரைக்காலில் தடை விதிப்பது நியாயமில்லை. எனவே புதுச்சேரி முதல்வரும், துணை நிலை ஆளுநரும் சம்பந்தப்பட்ட அரசு செயலரை அழைத்துப் பேசி, உத்தரவை ரத்து செய்து சிறிய படகுகள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வழங்கவேண்டும் என்றாா் நாஜிம்.