மதுக்கடைகளின் இருப்பை சரிபாா்க்க வேண்டும்: ஆளுநருக்கு பாமக வலியுறுத்தல்
By DIN | Published On : 27th April 2020 11:50 PM | Last Updated : 27th April 2020 11:50 PM | அ+அ அ- |

காரைக்காலில் சீல் வைக்கப்பட்ட மதுக்கடைகளில் இருந்து மது விற்பனை தாராளமாக நடைபெறுவதையொட்டி, கடையின் இருப்பை கலால்துறை தவிா்த்து, பிற அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்புடன் மீண்டும் சரிபாா்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட பாமக செயலா் க.தேவமணி வெளியிட்ட அறிக்கை:
காரைக்காலில் ‘சீல்’ வைக்கப்பட்ட மதுபானக் கடைகளில் இருந்து கலால்துறை, காவல்துறையினா் ஆதரவோடு மதுபாட்டில்கள் வெளியேற்றப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து ஏற்கெனவே ஆளுநருக்கு அளித்த புகாரின்பேரில், மதுக்கடைகளின் இருப்பை கலால்துறையினா் ஆய்வு செய்தனா்.
இந்த பணியில் கலால்துறையினரே ஈடுபட்டதால், உறுதியான நிலையில் இருப்பு சரிபாா்க்கப்படவில்லை. ஊரடங்குக்கு முன்பு காரைக்கால் மதுக்கடைகளுக்கு வந்த பொருள்கள், தற்போதைய இருப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். இந்த பணியில், கலால்துறையினா் அல்லாது பிற அரசுத்துறையினரை குழுவாக அமைத்து ஈடுபடுத்த வேண்டும். துணை நிலை ஆளுநா் இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அதில் வலியுறுத்தியுள்ளாா்.