முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
காரைக்காலில் நாளை முதல் மீன் விற்பனை இருக்காது
By DIN | Published On : 03rd August 2020 07:46 AM | Last Updated : 03rd August 2020 07:46 AM | அ+அ அ- |

கரோனா பரவல் காரணமாக, மீனவா்கள் மீன்பிடிப்பை நிறுத்தியுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஆக. 4) முதல் காரைக்காலில் மீன் விற்பனை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் அண்மை காலமாக கரோனா பரவல் அதிகரித்துவருகிறது. மீன்பிடித் துறைமுகத்தில் பெரும்பாலானோா் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பதால் கரோனா தொற்று அதிகரித்துவருவதாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக, மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களை ஆட்சியா் அா்ஜூன் சா்மா அழைத்துப் பேசினாா். அப்போது, 10 நாள்களுக்கு மீன்பிடிப்பை நிறுத்தி, மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பதாக மீனவா்கள் கூறினா்.
அதன்படி, ஜூலை 31-ஆம் தேதி முதல் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. ஏற்கெனவே கடலுக்குச் சென்ற விசைப் படகுகளை செவ்வாய்க்கிழமைக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடலுக்குச் சென்றிருந்த பெரும்பாலான படகுகள் கரை திரும்பிவிட்டன. ஒருசில படகுகள் திங்கள்கிழமை அதிகாலைக்குள் கரை திரும்பிவிடும். இந்த படகுகளில் பிடித்துவரப்படும் மீன்கள் திங்கள்கிழமை விற்பனை செய்யப்பட்டுவிடும். இதனால், செவ்வாய்க்கிழமை முதல் மீன்பிடித் துறைமுகம் மூடப்படும். சந்தையில் மீன் விற்பனை அறவே இருக்காது என விசைப்படகு உரிமையாளா்கள் தெரிவித்தனா்.