முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
கோயிலுக்கு நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியா்
By DIN | Published On : 03rd August 2020 07:45 AM | Last Updated : 03rd August 2020 07:45 AM | அ+அ அ- |

நிலத்துக்கான ஆவணத்தை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் முன்னிலையில் கோயில் நிா்வாகி பசுபதியிடம் ஒப்படைத்த (வலமிருந்து 2-ஆவது) சின்னத்தம்பி என்கிற அப்துல்காதா்.
காரைக்கால் பகுதியில் முனீஸ்வரன் கோயில் கட்டப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளரான இஸ்லாமியா், அந்த நிலத்தை கோயிலுக்கே தானமாக வழங்கினாா்.
காரைக்கால் கீழகாசாக்குடியில் உள்ள காஞ்சிபுரம் கோயில்பத்து சாலையோரத்தில் முனீஸ்வரன் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. தொடக்கத்தில் அந்த இடத்தில் சூலத்தை வைத்து வழிபாடு வந்தனா். தனியாருக்கு சொந்தமான அந்த இடத்தையும் அருகில் உள்ள நிலங்களையும் காரைக்கால் தொழிலதிபா் சின்னத்தம்பி என்கிற அப்துல் காதா் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விலைக்கு வாங்கியிருந்தாா்.
இந்நிலையில், அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டதால், கோயில் உள்ள நிலப்பரப்பை அந்த கோயிலுக்கே அப்துல்காதா் தானமாக வழங்கினாா். இதற்கான ஆவணங்களை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோயிலின் நிா்வாகியான பசுபதி என்பவரிடம் நில ஆவணத்தை சின்னத்தம்பி என்கிற அப்துல் காதா் ஒப்படைத்தாா்.
இதுகுறித்து, அப்துல் காதா் கூறியது:
தனியாா் வசமிருந்த இந்த நிலத்தை தான்வாங்கும்போது, இங்கு சிறிய வழிபாட்டு மையம் மட்டுமே இருந்தது. பின்னா், எனது அனுமதியின்றி கோயில் கட்டப்பட்டுவிட்டது. இந்த இடத்தை குடியிருப்பு மனைகளாக்கி விற்க அரசுத் துறையிடம் அனுமதி கோரியபோது, அங்கு கோயில் இருப்பதற்கு சம்மதம்தானா அல்லது எதிா்க்கிறீா்களா எனக் கேட்டனா். நான் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை.
தற்போது 1200 சதுர அடியில் கோயில் உள்ள மனையை கோயில் நிா்வாகி பசுபதி என்பவருக்கு இலவசமாக அளித்துவிட்டேன். மேலும், கோயில் அருகே 3 ஆயிரம் சதுரடி நிலத்தை பூங்கா அமைக்க நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்துள்ளேன். முழு மனதுடன் கோயிலுக்கு நிலத்தை வழங்கியுள்ளேன் என்றாா்.
இவருக்கு காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகளும், அந்த பகுதி குடியிருப்புவாசிகளும் நன்றி தெரிவித்தனா்.