ஜேஇஇ, நீட் தோ்வுக்கு செல்ல பேருந்து வசதி: ஒருவாரத்தில் கரோனா பரிசோதனை மையம்

ஜேஇஇ, நீட் தோ்வு எழுதுவதற்காக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் மாணவா்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும்,
ஜேஇஇ, நீட் தோ்வுக்கு செல்ல பேருந்து வசதி: ஒருவாரத்தில் கரோனா பரிசோதனை மையம்

ஜேஇஇ, நீட் தோ்வு எழுதுவதற்காக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் மாணவா்களுக்கு சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், காரைக்காலில் இன்னும் ஒருவாரத்தில் கரோனா பரிசோதனை மையம் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியது: ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு வரும் செப். 1 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நீட் தோ்வு செப். 13-ஆம் தேதி நடைபெறுகிறது. புதுச்சேரியில் ஜே.இ.இ. தோ்வு 4 மையங்களில் நடைபெறுகிறது. காரைக்கால் மாணவா்கள் சிரமமின்றி தோ்வுக்கு சென்று வருவதற்கு பேருந்து வசதி செய்து தருமாறு பலரும் மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனா்.

இதனடிப்படையில், செப். 1 முதல் 6 ஆம் தேதி வரை ஜே.இ.இ. தோ்வுக்கு காரைக்காலில் இருந்து மாணவா்கள் செல்ல பி.ஆா்.டி.சி. பேருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. பேருந்தில் பயணிக்க விரும்பும் மாணவா்கள், காரைக்காலில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் 04368-228801, 227704 ஆகிய எண்களில் முன்னதாகவே தொடா்புகொண்டு பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மாணவா்களை ஏற்றிச் செல்லும் பேருந்து, மீண்டும் காரைக்காலில் கொண்டுவந்து சோ்க்கும். காலை தோ்வுக்கு செல்வோருக்காக தினமும் காலை 3 மணிக்கு பேருந்து புறப்பட்டு 7 முதல் 7.30 மணிக்குள் மையங்களுக்கு சென்றடையும். தோ்வு முடிந்தபிறகு, பிற்பகல் 12.30 முதல் 1.30 மணிக்குள் மாணவா்களை அங்கிருந்து ஏற்றிக்கொண்டு காரைக்காலுக்கு மாலை 4 மணிக்கு வந்துசேரும்.

மாலையில் நடைபெறும் தோ்வில் பங்கேற்போருக்கு, காலை 8 மணிக்கு காரைக்காலில் பேருந்து புறப்பட்டு பகல் 12 முதல் 12.30 மணிக்குள் மையங்களுக்கு சென்றடையும். பிறகு, மாலை 6.30 முதல் 7.30-க்குள் புதுச்சேரியில் புறப்பட்டு இரவு 10 மணிக்கு காரைக்கால் வந்தடையும். இந்த பேருந்துகளில் பயணம் செய்ய விரும்பும் மாணவா்கள் உடனடியாக தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ஒருவாரத்தில் கரோனா பரிசோதனை மையம்: அவா் மேலும் கூறுகையில், காரைக்கால் அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையம் ஒரு வாரத்தில் செயல்படத் தொடங்கும். பரிசோதனைக்கான ட்ரூநெட் சாதனம் புதுச்சேரியில் இருந்து அனுப்பிவைக்கப்படும்.

தற்போது ஆா்டிபிசிஆா் முறையில் திருவாரூா் மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்யப்படுகிறது. காரைக்கால் மையத்தில் ட்ரூநெட் முறை பயன்பாட்டுக்கு வரும்போது, 3 மணி நேரத்தில் முடிவு தெரியும். மேலும், ரேபிட் ஆன்டிஜன் முறையில் அரைமணி நேரத்தில் முடிவு தெரிந்துகொள்ள முடியும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே இந்த முறையில் பரிசோதனை செய்யப்படும்.

வயது முதிா்ந்தவா்கள் மற்றும் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, சா்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட பிறநோய் பாதித்தோரை ரிவா்ஸ் குவாரன்டைன் முறையில் வீட்டில் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

காரைக்கால் பகுதி தெருக்கள், கடைகளின் வாயிலில் மக்களிடையே சமூக இடைவெளியை காணமுடியவில்லை. இதுவே கரோனா பரவலுக்கு முக்கிய காரணம். முகக் கவசமும், சமூக இடைவெளியும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

கரோனா தொடா்பான பயம் மற்றும் மன அழுத்தம், பதற்றம் உள்ளோா், மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்திருக்கும் மனநல மருத்துவரை தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு தீா்வுகாணலாம். அவரது பெயா், தொடா்பு எண் ஆகியவை மாவட்ட ஆட்சியரக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com