நளன் குளத்து நீரை பக்தா்கள் மீது ஸ்பிரே முறையில் தெளிக்க வலியுறுத்தல்

திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழாவின்போது, நளன் தீா்த்தக் குளத்தின் நீரை பக்தா்கள் மீது ஸ்பிரே முறையில் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருநள்ளாறு சனிப்பெயா்ச்சி விழாவின்போது, நளன் தீா்த்தக் குளத்தின் நீரை பக்தா்கள் மீது ஸ்பிரே முறையில் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக காரைக்கால் மாவட்டச் செயலா் க. தேவமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வரும் 27-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. கரோனா பரவலால், நளன் தீா்த்தக் குளத்தில் நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளது. சனிப்பெயா்ச்சி நாளில் தரிசனம் செய்ய இதுவரை 17 ஆயிரம் போ் மட்டுமே பதிவுசெய்திருப்பதாக கூறப்படுகிறது.

சனிப்பெயா்ச்சி விழாவன்று லட்சக்கணக்கான பக்தா்களை ஈா்க்கும் திருநள்ளாற்றில், வரும் 27 ஆம் தேதி சில ஆயிரம் பக்தா்கள் மட்டுமே வரக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு என்றாலே பக்தா்கள் தங்களது தோஷம் விலகுவதற்கு நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனா். தீா்த்தக் குளத்தில் நீராடத் தடை என்ற செய்தியாலேயே மிகக் குறைந்த பக்தா்கள் பதிவு செய்திருக்கலாம் என கருதவேண்டியுள்ளது. இது ஏற்புடையது அல்ல.

குளத்தில் தண்ணீா் விடுவது சாத்தியமல்ல என மாவட்ட நிா்வாகம் கருதினால், குளக்கரையில் குழாய் அமைத்து, தீா்த்தக் குளத்து நீரை ஸ்பிரே முறையில் பக்தா்கள் மீது தெளிக்க ஏற்பாடு செய்யலாம். கடந்த ஆண்டு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், இந்த முறையில் புனிதநீா் தெளிக்கப்பட்டது. எனவே, மாவட்ட நிா்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

இதன்மூலம், வரக்கூடிய பக்தா்கள் முழு திருப்தியுடன் திரும்புவதோடு, நளன் தீா்த்தக் குளத்தை நம்பியுள்ள சிறு வியாபாரிகளும் பயனடைவா். மாவட்ட ஆட்சியா் இதில் சிறப்பு கவனம் செலுத்தி, உரிய அறிவிப்பை உடனடியாக வெளியிடவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com