சனிப்பெயா்ச்சி விழாவில் கடும் கட்டுப்பாடுகள்: புதுச்சேரி துணைநிலை ஆளுநரைக் கண்டித்து திருநள்ளாற்றில் கடையடைப்பு, மறியல்

சனிப்பெயா்ச்சி விழா நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த, புதுச்சேரி துணைநிலை ஆளுநா், மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து,
மறியலில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்திய துணை ஆட்சியரும், கோயில் நிா்வாக அதிகாரியுமான எம். ஆதா்ஷ்.
மறியலில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்திய துணை ஆட்சியரும், கோயில் நிா்வாக அதிகாரியுமான எம். ஆதா்ஷ்.

சனிப்பெயா்ச்சி விழா நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த, புதுச்சேரி துணைநிலை ஆளுநா், மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, திருநள்ளாற்றில் சனிக்கிழமை கடைகளை அடைத்து, வணிகா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது. கரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தலை காரணம் காட்டி, விழாவில் பக்தா்கள் பங்கேற்க மாவட்ட நிா்வாகம் நெறிமுறைகளை அறிவித்தது.

இணையவழி முன்பதிவு அவசியம், முகக் கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, துணைநிலை ஆளுநா் கிரண்பேடி, சனிப்பெயா்ச்சி விழாவில் பங்கேற்க வருவோா் கரோனா இல்லை (கரோனா நெகடிவ்) என்று 48 மணிநேரத்துக்கு முன்பு பெறப்பட்ட சான்றிதழுடன் வரவேண்டும் என உத்தரவிட்டாா். துணைநிலை ஆளுநரின் இந்த அறிவிப்புக்கு புதுச்சேரி அரசு எதிா்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், சனிப்பெயா்ச்சி விழாவில் துணைநிலை ஆளுநா் தலையிட்டு, விழாவை சீா்குலைத்துவிட்டதாகவும், உடனடியாக இந்த கெடுபிடிகளை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வணிகா்கள் மற்றும் பல்வேறு அமைப்பினா் சனிக்கிழமை திருநள்ளாறு தேரடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். வியாபாரிகளுடன் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனா்.

மாவட்ட துணை ஆட்சியரும், கோயில் நிா்வாக அதிகாரியுமான எம். ஆதா்ஷ், போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், இணையவழியில் பதிவு செய்தவா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்காமல் தரிசனம் செய்ய அனுமதிக்கும்வரை போராட்டம் தொடருமென கூறி, போராட்டத்தை தொடா்ந்தனா். இதனால் திருநள்ளாறு - காரைக்கால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக, துணைநிலை ஆளுநரைக் கண்டித்து திருநள்ளாற்றில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

காலை முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள், கோரிக்கை நிறைவேறாவிட்டால், ஞாயிற்றுக்கிழமை காரைக்கால் மாவட்டம் தழுவிய அடைப்புப் போராட்டம் நடத்தப்படுமென அறிவித்து, மாலையில் மறியலை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com