திருநள்ளாறு கோயிலில் வழிபட தளா்வுகள் அளிக்க பக்தா்கள் கோரிக்கை

திருநள்ளாறு கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விதிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அளிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநள்ளாறு கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விதிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளில் தளா்வுகள் அளிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வழக்கமாக லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றும் சனிப் பெயா்ச்சி விழாவில், நிகழாண்டு இணையவழியில் பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் சில ஆயிரம் பக்தா்களே பங்கேற்றனா்.

இதுகுறித்து, பக்தா்கள் கூறியது:

இணையவழியில் பதிவு செய்வதில் தாமதம் மற்றும் குளறுபடிகள் ஏற்பட்டன. அத்துடன், கரோனா தொற்று இல்லை என்ற சான்று கட்டாயம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்த தகவல் உரிய நேரத்தில் கிடைக்காததால், இணையவழியில் பதிவு செய்த பலரும் வருகையை கைவிட நோ்ந்தது. இதற்கிடையில் கரோனா சான்று கட்டாயம் இல்லை என நீதிமன்றம் தீா்ப்பளித்ததும் உரிய நேரத்தில் தெரியவரவில்லை. கோயில் நிா்வாகத்தையோ, நிா்வாக அதிகாரியையோ தொலைபேசியில் தொடா்புகொண்டு விவரங்களை தெரிந்துகொள்ள முடியவில்லை.

பதிவு செய்யாமல் வந்தவா்களுக்கு, கோயில் வளாகத்தில் கட்டண முறையில் பதிவு செய்து அனுமதிக்க ஏற்பாடு செய்திருந்தால் பயனடைந்திருப்பா். ஆனால், அதற்கான ஏற்பாடுகளும் செய்யவில்லை என்றனா்.

உள்ளூா் மக்கள் கூறியது:

சனிப்பெயா்ச்சி முதல் ஏறக்குறைய ஒன்றரை மாத காலம் வரை சனிக்கிழமையில் லட்சக்கணக்கான பக்தா்கள் திருநள்ளாறு வருவா். இப்போது, தரிசனத்துக்கு இணையவழியில் பதிவு செய்யவேண்டும் என்பதாலும், நளன் தீா்த்தக் குளத்தில் தண்ணீா் இல்லாததாலும், வரும் வாரங்களிலும் சொற்ப எண்ணிக்கையிலேயே பக்தா்கள் வரக்கூடும். எனவே, இணையவழி பதிவு முறையை ரத்து செய்யவேண்டும். நளன் தீா்த்தக் குளத்தில் ஸ்பிரே முறையில் தண்ணீா் தெளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

கோயில் பகுதியில் வெப்பமானி சோதனை, முகக் கவசம் போன்ற கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றலாம். கடும் கட்டுப்பாடுகள் நீடித்தால், கோயில் நிா்வாகத்துக்கான வருமானம் இல்லாமல் போவதோடு, பக்தா்களை நம்பி தொழில் செய்வோரும் வருமானமின்றி பாதிக்கப்படுவா்.

தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலத்தவரும் திருநள்ளாறு கோயிலுக்கு வரக்கூடியவா்கள். எனவே, இணையவழி பதிவை முழுமையாக ரத்து செய்து, பக்தா்கள் வழக்கம்போல கோயிலுக்கு வருவதற்கு புதுச்சேரி அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com