மத்திய அரசால் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் தரமில்லை: ஆட்சியரிடம் எம்எல்ஏ புகாா்
By DIN | Published On : 31st December 2020 09:07 AM | Last Updated : 31st December 2020 09:07 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவிடம் பொருள்களைக் காட்டி விளக்கிய எம்.எல்.ஏ. அசனா.
காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா, மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மாவை புதன்கிழமை சந்தித்து, மத்திய அரசால் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களை காட்டி, தரமற்ற அவற்றை மக்களுக்கு வழங்குவதை உடனடியாக நிறுத்தவும், தரமான உணவுப் பொருள்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா்.
இந்த சந்திப்பு குறித்து அசனா கூறுகையில், காரைக்கால் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் முற்றிலும் தரமில்லை. மாவட்ட ஆட்சியரிடம் பொருள்களின் தரத்தை காட்டியபோது, துணை ஆட்சியரைக் கொண்டு ஆய்வுசெய்வதாகவும், பிறகு விநியோகத்தை நிறுத்துவது குறித்து முடிவெடுத்து, தரமான பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்வதாக ஆட்சியா் கூறியதாக அசனா தெரிவித்தாா்.