இணைப்புச் சாலையில் மின் விளக்குகள் எரியாததால் மக்கள் அவதி

காரைக்கால் கோயில்பத்துப் பகுதியின் இணைப்புச் சாலையில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்டடம் இருப்பதோடு, போக்குவரத்து மிகுந்திருக்கும்
இணைப்புச் சாலையில் நிறுவப்பட்டிருக்கும் மின் கம்பங்கள்.
இணைப்புச் சாலையில் நிறுவப்பட்டிருக்கும் மின் கம்பங்கள்.

காரைக்கால் கோயில்பத்துப் பகுதியின் இணைப்புச் சாலையில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி கட்டடம் இருப்பதோடு, போக்குவரத்து மிகுந்திருக்கும் சூழலில், இச்சாலையில் மின் விளக்குகள் பல நாட்களாக எரியாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

காரைக்கால் பேருந்து நிலையம் சிக்னலில் இருந்து மேற்குநோக்கிய சாலை நெடுங்காடு செல்லும் சாலையோடு இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி வளாகம் உள்ளிட்டவை உள்ளன. இந்த சாலையை மேற்கு புறவழிச்சாலை கடக்கிறது. இணைப்புச் சாலை என்பது ஏறக்குறைய 1 கி.மீ. தூரம் உள்ளது. இணைப்புச்சாலையில் மின் கம்பங்கள் நிறுவப்பட்டு, விளக்குகள் எரியவிடப்பட்டு பயன்பாட்டில் இருந்துவந்தன.

கடந்த பல நாட்களாக இணைப்புச் சாலையில் மின் விளக்குகள் பலவும் எரியாததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாவதாக புகாா் கூறப்படுகிறது.

மின் வெளிச்சம் உள்ளபோதே இந்த சாலையில் வழிப்பறி, விபத்து மற்றும் சமூகக் கேடான செயல்பாடுகள் நடக்கிறது.

இந்நிலையில், இணைப்புச் சாலையில் மின் விளக்குகளே எரியாமல் இருண்டு காணப்படுவதால், வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனா். விபத்துகளும் நடக்கின்றன. ஜிப்மா் மருத்துவக் கல்லூரி வாயில் பகுதியில் சாலையோரத்தில் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கின்றன. இவை சுத்தம் செய்யப்படுவதற்கு அரசு நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

பல்வேறு மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்கள் மருத்துவக் கல்வி பயிலும் உயா்தர மருத்துவக் கல்லூரி வளாகம் இருப்பதோடு மட்டுமல்லாது, அதிகமான வாகனப் போக்குவரத்துள்ள சாலையாகவும் திகழும்போது, இந்த சாலை தூய்மையாகவும், மின் வெளிச்சத்துடனும், சாலை சீா்கேடு இன்றியும் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிா்வாகம், பொதுப்பணித்துறை, மின்துறை உள்ளிட்டவை கண்டும் காணாததுபோல இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இணைப்புச் சாலைப் பகுதியில் நிலவும் சீா்கேடுகளைக் களைய நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com