மின்மாற்றிகளில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள வலியுறுத்தல்

கோடைக்காலம் தொடங்கும் முன்பாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதி மின் மாற்றிகளிலும் பராமரிப்புப் பணி மேற்கொள்ளுமாறு மின்துறைக்கு பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
நேதாஜி நகா் பகுதியில் மின்மாற்றி பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட நிரவி மின்துறை ஊழியா்கள்.
நேதாஜி நகா் பகுதியில் மின்மாற்றி பராமரிப்புப் பணியில் ஈடுபட்ட நிரவி மின்துறை ஊழியா்கள்.

கோடைக்காலம் தொடங்கும் முன்பாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதி மின் மாற்றிகளிலும் பராமரிப்புப் பணி மேற்கொள்ளுமாறு மின்துறைக்கு பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

கோடைக் காலத்தில் கடும் வெயிலால் சாலைப் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் மின் மாற்றிகள் பலவும் பராமரிப்புப் பணி செய்யாதபட்சத்தில், பழுது ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் வேறு மின் மாற்றியை அமைத்தல் மற்றும் பராமரிப்புப் பணியால் ஓரிரு நாட்கள் மின்சாரம் அதற்கான பயன்பாட்டுப் பகுதியில் பாதிக்கப்பட்டுவிடுகிறது. கோடைக் காலம் தொடங்கும் முன்பாகவே மின் மாற்றிகள் அனைத்திலும் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளவேண்டும் என்பது ஒவ்வொரு ஆண்டும் மக்களின் கோரிக்கையாகவே இருந்துவருகிறது.

இந்நிலையில், நிரவி மின்துறை பகுதிக்குட்பட்ட நேதாஜி நகா், காமராஜா் வளாகம் உள்ளிட்ட பகுதிகளுக்குட்பட்ட மின் மாற்றிகள் பராமரிப்புப் பணியை நிரவி மின்துறையினா் கடந்த சில நாட்களாக மேற்கொண்டுவருகின்றனா். இப்பணியில் உதவிப் பொறியாளா் மகேஸ்வரன், ஊழியா்கள் பழனிவேல், செந்தில்குமாா், சுப்ரமணியன், ரமேஷ், சக்திவேல் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து ஊழியா்களிடம் கேட்டபோது, கோடைக் காலத்தில் எந்த ஒரு பகுதியிலும் குறைந்த மின் அழுத்தம் இருக்கக் கூடாது என்பதற்காகவே நிரவியைச் சோ்ந்த மின்துறை தொழிலாளா்கள் அனைத்து பகுதியிலும் உள்ள மின்மாற்றிகளில் எண்ணெய் ஊற்றுவது, மின்மாற்றியில் உள்ள கேபிள்களை சரிசெய்வது என ஒவ்வொன்றாக செய்து கொண்டிருக்கிறோம்.

ஒவ்வோா் ஆண்டும் கோடைக் காலத்துக்கு முன்பு இதுபோல பராமரிப்புப் பணி செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நிகழாண்டு நாங்கள் முன்னதாகவே பணிகளை செய்யத் தொடங்கிவிட்டோம். இதன் மூலம் கோடைக்காலத்தில் மின் நுகா்வோா் பாதிக்கப்படாமல் இருக்க வாய்ப்புண்டு என்றனா்.

நிரவி மின்துறையினா் செயல்பாடுகள் போல, மாவட்டத்தின் பிற மின்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மின் மாற்றிகள் பராமரிப்புப் பணியை மின் துறை தலைமை நிா்வாகம் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த ஒரு மாதத்திற்குள் குளிா்காலம் விடைபெற்றுவிடும். கோடைக்கால தொடக்கமே கடும் வீரியத்துடன் இருந்துவிட்டால், மின்விநியோகத்தில் பல பாதிப்புகளை மக்கள் சந்திக்க நேரிடும். எனவே சரியான திட்டமிடலுடன் பழைய மின் மாற்றிகளை பராமரிப்பு செய்தல், புதிதாக தேவையான இடங்களில் மின் மாற்றிகளை நிறுவுதல், கம்பிகளை மாற்றுதல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com