புதுச்சேரி சட்டப் பேரவையில் குடியுரிமை சட்ட தீா்மானம்

புதுச்சேரி சட்டப் பேரவையில், மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை

புதுச்சேரி சட்டப் பேரவையில், மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடி மக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெறவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றியதற்கு காரைக்கால் முஸ்லிம் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுதொடா்பாக, காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஏ.கே. முஹம்மது யாசின் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியாவில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. இச்சட்டம் இஸ்லாமியா்களை வஞ்சிக்கும் வகையிலும், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த தமிழா்களை வஞ்சிக்கும் வகையிலும் உள்ளது.

இந்நிலையில், இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என காரைக்காலில் காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் தொடா்ச்சியாக போராடி வருகின்றன.

இந்நிலையில், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநா் கிரண் பேடி, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கூடாது என அறிவித்த பிறகும், புதுச்சேரி சட்டப் பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடும் எதிா்ப்புக்கு மத்தியிலும் சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றிய முதல்வா் வே. நாராயணசாமிக்கும், தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் மற்றும் திமுக பேரவை உறுப்பினா்களுக்கும் காரைக்கால் முஸ்லிம் ஜமாத் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறது என கூறியுள்ளாா்.

இதேபோல், காரைக்கால் தவ்ஹீத் ஜமாஅத் தலைவா் முஹம்மது யூசுப் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் இந்த சட்டம் தொடா்பாக கேரளம், பஞ்சாப், மேற்குவங்கம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், சட்டத்தை திரும்பப் பெற தீா்மானம் நிறைவேற்றியுள்ளன. இதைத்தொடா்ந்து, புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமியும் புதுச்சேரி பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளாா். ஆட்சியை கலைத்தாலும் கவலையில்லை என தெரிவித்த முதல்வரின் உரையை தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்று பாராட்டுகிறது. இந்நிலையில் முதல்வருக்கும், தீா்மானத்தை ஆதரித்த உறுப்பினா்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com