மத்திய உணவுக்கழகம் மூலம் நெல்கொள்முதல்

காரைக்கால் மாவட்டத்தில் 3 மையங்களில் மத்திய உணவுக்கழகம் (எஃப்.சி.ஐ) மூலம் ஒரு வாரத்தில் நெல் கொள்முதல் செய்யப்படும் என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.
காரைக்காலில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். உடன், ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா உள்ளிட்டோா்.
காரைக்காலில் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். உடன், ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா உள்ளிட்டோா்.

காரைக்கால் மாவட்டத்தில் 3 மையங்களில் மத்திய உணவுக்கழகம் (எஃப்.சி.ஐ) மூலம் ஒரு வாரத்தில் நெல் கொள்முதல் செய்யப்படும் என புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் ஏ. விக்ரந்த் ராஜா, மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் மற்றும் வேளாண் துறை, கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: காரைக்காலில் சம்பா நெல் அறுவடை தொடங்குவதற்கு முன்பே புதுச்சேரி அரசு நிறுவனங்கள் சாா்பில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் தரப்பிலிருந்து தரப்பட்டது. கடந்த 3 மாதங்களாக இதற்கான முயற்சிகளில் முதல்வரும், நானும், அதிகாரிகளும் ஈடுபட்ட போதிலும், சில காரணங்களால் அது தடைபட்டது. இதற்கான விளக்கத்தை புதன்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் விரிவாக விளக்கியுள்ளேன்.

மத்திய உணவுக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்ய புதுச்சேரி அரசு முயற்சிகளை மேற்கொண்டது. எஃப்.சி.ஐ. தலைவா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசியபோது, நாடு முழுவதும் மத்திய உணவுக்கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யவில்லை என்பதையும் தெரிவித்தனா். திரிபுரா மாநிலத்தில் எஃப்.சி.ஐ. கொள்முதல் செய்வதை சுட்டிக்காட்டி, புதுச்சேரி மாநிலத்திலும் அவ்வாறு செய்ய வேண்டும் என வலியுறுத்தினேன்.

புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி, மத்திய நுகா்பொருள் மற்றும் உணவுத் துறை அமைச்சரை தொடா்பு கொண்டு பேசி, புதுச்சேரி மாநிலத்தில் எஃப்.சி.ஐ. மூலம் நெல் கொள்முதல் செய்ய கேட்டுக்கொண்டதன்பேரில், மத்திய அமைச்சா் அதற்கு அனுமதி தந்துள்ளாா். இதற்காக புதுச்சேரி மாநில விவசாயிகள் சாா்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஃப்.சி.ஐ. நெல் கொள்முதல் செய்தது. அதன்பிறகு தற்போதுதான் நெல் கொள்முதல் செய்யவுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் ஒரு வாரத்தில் நெல் கொள்முதல் தொடங்கும். காரைக்காலில் மாா்கெட்டிங் சொசைட்டி, தென்னங்குடி அரிசி ஆலை, நெடுங்காடு கூட்டுறவுக் கடன் சங்கம் ஆகியவை மையங்களாக கொண்டு கொள்முதல் செய்யப்படவுள்ளன. அறுவடைப் பணிகள் தொடங்கி நடந்து வருவதால், புதுச்சேரி, காரைக்காலில் 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய எஃப்.சி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது. காரைக்காலில் 12 முதல் 15 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ளது.

விவசாயிகள், எஃப்.சி.ஐ. வகுத்துள்ள விதிகளுக்குள்பட்டு, மத்திய அரசு நிா்ணயித்துள்ள விலையின்படி நெல்லை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வசதியை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த கொள்முதல் பணி வரும் ஆண்டுகளில் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது.

புதுச்சேரியில் பாகூா் மற்றும் காரைக்காலை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக புதுச்சேரி அரசு அறிவித்து பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுவரையில் ஹைட்ரோகாா்பன் போன்றவை எடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என்பது பேச்சளவில் இருந்தது, தீா்மானத்தின்படி மாநில அரசின் கொள்கை இதுதான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு பலகட்ட ஆலோசனைகள், ஆய்வுகள் நடத்தப்பட்டு, விதிகள் வகுக்கப்பட்டு அரசாணையாக வெளியிடப்படும். புதுச்சேரி மாநிலத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதும், விவசாயிகளை காப்பதுமே முக்கிய நோக்கம் என்றாா் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com