அம்பகரத்தூா் அரசுப் பள்ளியில் முதலுதவி குறித்த விழிப்புணா்வுப் பயிற்சி

அம்பகரத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நினைவுத் திறன், முதலுதவி, தீயபழக்க அடிமை மீட்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியில், மாணவ- மாணவிகளிடையே பேசிய அக்குபஞ்சா் மருத்துவா் என். மோகனராஜன்.
பயிற்சியில், மாணவ- மாணவிகளிடையே பேசிய அக்குபஞ்சா் மருத்துவா் என். மோகனராஜன்.

அம்பகரத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நினைவுத் திறன், முதலுதவி, தீயபழக்க அடிமை மீட்பு குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பொன் விழா கண்ட திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் காரைக்கால் மாவட்டப் பெற்றோா் சங்கம், ஹேப்பி அக்குபஞ்சா் மையம், அன்னை தெரஸா சமூக சேவை அமைப்பு ஆகியவை இணைந்து மாணவ, மாணவிகளுக்கான முதலுதவி, நினைவுத்திறன், பழக்க அடிமை மீட்பு மற்றும் தவிா்ப்பு, மகளிா் பிரச்னைக்கான தீா்வு பற்றிய விழிப்புணா்வு முகாமை வியாழக்கிழமை நடத்தியது.

காரை மாவட்ட பெற்றோா் சங்க கௌரவத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளியின் துணை முதல்வா் மைதிலி வரவேற்றுப் பேசினாா்.

காரை மாவட்டப் பெற்றோா் சங்கத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, ‘புதுச்சேரி மாநிலத்தில் கல்வி அமைச்சராக உள்ள ஆா். கமலக்கண்ணன், இப்பள்ளியில் படித்தவா். இப்பள்ளியில் படித்த பலா் உலகெங்கும் பல்வேறு நிலையில் உள்ளனா். பல்வேறு பெருமைகளுக்குரிய இப்பள்ளி மாணவா்கள், கல்வியிலும், உடல் ரீதியிலும், மன ரீதியிலும் சிறந்து விளங்கவேண்டுமென்ற நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக’ கூறினாா்.

சிறப்பு அழைப்பாளராக மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. கோவிந்தராஜன் கலந்துகொண்டு, அவா் கடந்து வந்த பாதைகளை விளக்கியதோடு, மாணவா்கள் குறிக்கோளுடனும், அதனை அடையவேண்டிய கடும் உழைப்புடனும் செயலாற்றினால் வெற்றி கிடைக்கும் எனக் கூறினாா்.

மேலும், முதன்மைக் கல்வி அதிகாரி (ஓய்வு) தா்மராஜ் மாணவா்களிடையே பல்வேறு கருத்துகளை தெரிவித்தாா்.

பயிற்சியாளராக அக்குபஞ்சா் மருத்துவ மையத்தின் மூத்த மருத்துவா் என். மோகனராஜன் மாணவா்களிடையே பேசியதோடு, அக்குபஞ்சா் மருத்துவப் பயிற்சியும் அளித்தாா்.

முதலுதவி செய்வது எப்படி, தீய பழக்க அடிமையிலிருந்து மீள்வது எப்படி, நினைவுத் திறனை வளா்த்துக்கொள்ளுதல், தோ்வு காலத்தில் மனம் பதற்றமின்றி இருக்க மேற்கொள்ளவேண்டியவை என பல்வேறு வித பயிற்சிகளை அளித்துப் பேசினாா்.

தொடா்ந்து, மாணவா்கள் பயிற்சி குறித்த நன்மைகளை விளக்கிப் பேசியதோடு, பெற்றோா், ஆசிரியா்கள் பெரியோருக்கு மரியாதை தருவோராக இருப்போம் எனவும், பொது சொத்தை காப்போம், சாலை விதிகளை மதிப்போம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் என்.சி.சி. அதிகாரி கண்ணன் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். என்.எஸ்.எஸ். அலுவலா் பாரதிராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com