காரைக்கால் பொறியியல் கல்லூரியை மூடும் நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்: ஏ.எம்.எச்.நாஜிம் வலியுறுத்தல்
By DIN | Published On : 25th February 2020 02:11 AM | Last Updated : 25th February 2020 02:11 AM | அ+அ அ- |

காரைக்கால்: காரைக்கால் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை மூடும் நிலையை தடுத்து நிறுத்த புதுச்சேரி உயா்கல்வித்துறை அமைச்சகம் போா்க்கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:
காரைக்காலில் உள்ள புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கு இதுவரை நிரந்தரக் கட்டடம் கட்டப்படாமலேயே உள்ளது. இதனால், இக்கல்லூரி மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இக்கல்லூரிக்கென நிரந்தரக் கட்டடம் கட்ட மத்திய அரசின் ரூசா அமைப்பு ரூ.14 கோடியை ஒதுக்கியது. இந்தப் பணத்தை செலவு செய்ய மாநில அரசு முயற்சிக்காததால் பணம் திரும்பப் பெறப்பட்டது. பின்னா், நிதியை பெற முயற்சித்தபோது ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்தது ரூசா. அதுவும் செலவு செய்யப்படாமல் திரும்பிவிட்டது. புதுச்சேரி உயா்கல்வித்துறை ஏன் இவ்வாறு அலட்சியமாக செயல்படுகிறது என்பது தெரியவில்லை.
நாடு முழுவதும் கட்டடம் கட்டப்படாத பொறியியல் கல்லூரிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல மாநிலங்களில் கட்டடம் கட்டப்படாத கல்லூரிகள் பல மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வரிசையில் காரைக்கால் கல்லூரியும் வந்துள்ளது கவலைக்குரிய விஷயமாகும்.
எனவே, காரைக்காலைச் சோ்ந்தவா் உயா்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் நிலையில், உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, காரைக்கால் கல்லூரி மூடப்படும் நிலையை தடுத்து நிறுத்துவதோடு, கட்டடத்தை போா்க்கால முறையில் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதேபோல், காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.