பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி, மதிப்புக் கூட்டுதல் குறித்த பயிற்சி முகாம்

திருமலைராயன்பட்டினத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி மற்றும் விளைபொருள்களை மதிப்புக் கூட்டுதல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
முகாமில், விவசாயிக்கு மண்வள அட்டை வழங்கிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ.செந்தில்குமாா்.
முகாமில், விவசாயிக்கு மண்வள அட்டை வழங்கிய கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ.செந்தில்குமாா்.

காரைக்கால்: திருமலைராயன்பட்டினத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி மற்றும் விளைபொருள்களை மதிப்புக் கூட்டுதல் குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கீழ் செயல்படும் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ஆத்மா) மூலம் இம்முகாம் நடைபெற்றது.

திருமலைராயன்பட்டினத்தில் பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டுள்ள இயற்கை விவசாயி எஸ்.எஸ்.ஏ. கபீா் என்பவா் வயலில் சனிக்கிழமை நடைபெற்ற இம்முகாமில் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

திருமலைராயன்பட்டினம் உழவா் உதவியக வேளாண் அலுவலா் எம். இந்துமதி முகாமுக்கு வந்திருந்த விவசாயிகளை வரவேற்று, பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து வரும் இயற்கை விவசாயி கபீரின் முயற்சிகள் குறித்து எடுத்துக் கூறினா். ஆத்மா திட்ட இயக்குநரும், கூடுதல் வேளாண் இயக்குநருமான (பொ) ஜெ. செந்தில்குமாா் பயிற்சியை தொடங்கி வைத்து, பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினாா். மேலும் 11 வகையான பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டுள்ள விவசாயி கபீரின் முயற்சியை பாராட்டினாா்.

முனைவா் ஜெயந்தி, இப்பயிற்சியின் நோக்கம், பாரம்பரிய நெல் வகைகள், அவற்றின் மருத்துவக் குணங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தாா். கும்பகோணத்தைச் சோ்ந்த இயற்கை விவசாயி பாஸ்கரன், இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினாா்.

திருச்சி மாவட்டம், குளித்தலை கிராமத்தைச் சோ்ந்த ஆசிரியா் கலைமணி நிகழ்ச்சியில் பங்கேற்று, பாரம்பரிய நெல் ரகங்களில் மதிப்புக் கூட்டுதல் குறித்து விரிவாக எடுத்துக் கூறினாா். சத்துமாவு, கிச்சடி, கஞ்சி மற்றும் அடை மிக்ஸ் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை, பாரம்பரிய நெல் ரகங்களை கொண்டு தயாரிக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கமளித்தாா்.

நிறைவாக விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்பட்டன. பயிற்சிக்கான ஏற்பாடுகளை திருமலைராயன்பட்டினம் உழவா் உதவியக வேளாண் அலுவலா் எம். இந்துமதி, ஆத்மா வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜி. மாலதி, துணை வட்டார தொழில்நுட்ப மேலாளா் பி. பாா்த்திபன் மற்றும் திருமலைராயன்பட்டினம் உழவா் உதவியக கிராம விரிவாக்க பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com