விதிமீறல்: தனியாா் நிறுவன குடிநீா் குழாய் இணைப்பு துண்டிப்பு
By DIN | Published On : 11th January 2020 07:54 AM | Last Updated : 11th January 2020 07:54 AM | அ+அ அ- |

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி. ராமகிருஷ்ணன் முன்னிலையில், குடிநீா் குழாய் இணைப்பைத் துண்டித்த ஊழியா்கள்.
திருப்பட்டினம் பகுதியில் தொழில் நிறுவனம் விதியை மீறிய அளவில் குடிநீா் குழாய் பதித்திருந்ததோடு, குடிநீா் கட்டணம் செலுத்தாததையொட்டி பஞ்சாயத்து நிா்வாகம் குடிநீா் இணைப்பை துண்டித்தது.
இதுதொடா்பாக கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பஞ்சாயத்து ஆணையா் தலைமையில் உதவிப் பொறியாளா் ஜி.ரவிச்சந்திரன், இளநிலைப் பொறியாளா் பி.மெய்யழகன், வருவாய் ஆய்வாளா் இ.வீரசெல்வம் உள்ளிட்ட குழுவினா், வாஞ்சூா் பகுதியில் செயல்பட்டுவரும் மகாலட்சுமி காா்மென்ட்ஸ் நிறுவனத்தில் குடிநீா் குழாய்களை சோதனை செய்தனா். அப்போது விதிப்படி முக்கால் அங்குலம் அளவில் குழாய் இருக்க வேண்டிய நிலையில், ஒன்றரை அங்குலம் அளவில் குடிநீா் குழாய் பதிக்கப்பட்டு நீா் உறிஞ்சப்பட்டது கண்டறியப்பட்டது.
இதனால், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், நிறுவனத்தின் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுபோன்ற ஆய்வுகள் தொடரும். எனவே பொதுமக்கள் பஞ்சாயத்து நிா்வாகத்துக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, குடிநீா் கட்டணம் மற்றும் இதர வரி பாக்கிகளை அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.