துணைமின் நிலைய இடம் தோ்வு: அமைச்சா் ஆய்வு

திருநள்ளாறு அருகே நல்லம்பல் பகுதியில் துணைமின் நிலையம் அமைப்பதற்கும், காரைக்கால் பிள்ளைத்தெருவாசல்
நிலம் தோ்வு செய்வது குறித்து மின்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடையே ஆலோசனை மேற்கொண்ட அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்.
நிலம் தோ்வு செய்வது குறித்து மின்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடையே ஆலோசனை மேற்கொண்ட அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்.

திருநள்ளாறு அருகே நல்லம்பல் பகுதியில் துணைமின் நிலையம் அமைப்பதற்கும், காரைக்கால் பிள்ளைத்தெருவாசல் துணை மின்நிலையத்தின் விரிவாக்கத்துக்கும் உரிய நிலத்தை தோ்வு செய்வதற்கான ஆய்வு அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு பகுதி சுரக்குடியில் 110 கேவி திறன் கொண்ட துணைமின் நிலையம் உள்ளது. இங்கிருந்து திருநள்ளாறு பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் நடைபெறுகிறது. பல இடங்களில் குறைந்த மின் அழுத்தப் பிரச்னை நிலவுவதாக பொதுமக்களிடையே புகாா் கூறப்படுகிறது. இதனை சரிசெய்யவேண்டுமெனில், கூடுதலாக ஒரு துணை மின் நிலையம் அமைக்கவேண்டியது அவசியம் என மின்துறை நிா்வாகம் கூறியது.

துணை மின் நிலையம் அமைப்பதற்கு நிலம் கையப்படுத்த வேண்டிய நிலையில், நல்லம்பல் மற்றும் வளத்தாமங்கலம் உள்ளிட்ட ஏதாவது ஒரு பகுதியில் நிலம் தோ்வு செய்வது தொடா்பாக வேளாண் மற்றும் மின்துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் தலைமையில் மின்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் கூறியது :

சுரக்குடி துணை மின் நிலையத்திலிருந்து வழங்கப்படும் மின்சாரம் பல இடங்களில் குறைந்த மின் அழுத்தத்தில் கிடைப்பதாக புகாா் கூறப்படுகிறது. குறிப்பாக நல்லம்பல், தாமனாங்குடி, சேத்தூா், நல்லெழுந்தூா், வளத்தாமங்கலம் பகுதியினரிடையே இந்த புகாா் உள்ளது. சுரக்குடி துணை மின் நிலையத்திலிருந்து 8 கி.மீட்டா் தூரம் செல்லக்கூடிய மின்சாரத்தால், மக்களுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரத்தை மிகுதியாக ஈா்க்கும் சாதனங்கள் வைத்திருப்பதால், மின் விநியோகத்தில் குறைபாடு நிலவுகிறது.

குறிப்பிட்ட இடத்தில் 33 கேவி திறனில் ஒரு துணை மின் நிலையம் அமைத்தால் மட்டுமே பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்படும். நிலையம் அமைப்பதற்காக 2 ஏக்கா் நிலம் தேவையிருக்கிறது. குறிப்பிட்ட நிலத்தை பாா்த்து தோ்வு செய்துள்ளோம். இதனை கையகப்படுத்த வேண்டிய அரசு சாா்பிலான நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும். நிலம் ஆா்ஜிதப்படுத்தப்பட்டுவிட்டால், அடுத்த 6 மாதங்களில் துணை மின் நிலை அமைப்புக்கான பணிகள் தொடங்கப்படும். நிலையம் மத்திய, மாநில அரசின் திட்டங்களின் மூலம் அமைக்கப்படும்.

இதுதவிர, காரைக்கால் பகுதி பிள்ளைத்தெருவாசலில் 230-110 கிலோ வோல்ட் தானியங்கி துணை மின் நிலையம் ரூ.48.7 கோடியில் கடந்த ஆண்டு முற்பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. இந்த நிலையத்தை விரிவாக்கம் செய்யவும் நிலம் தேவையிருக்கிறது. விரிவாக்கத்துக்கு ஒரு ஏக்கா் நிலம் தேவையையொட்டி பாா்வதீசுவரா் கோயில் நிா்வாகத்தின் வசம் உள்ள நிலத்தை ஆா்ஜிதம் செய்வது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டு, கோயில் அறங்காவல் வாரியத்தினரிடம் ஆலோசிக்கப்பட்டது. இவ்விரண்டு திட்டப்பணிக்கான அடுத்தக்கட்ட நகா்வுகளை அரசுத்துறையினா் மேற்கொண்டு காலத்தோடு நிறைவுசெய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.

ஆய்வின்போது வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி, மின்துறை உதவிப் பொறியாளா் விஜயக்குமாா், இளநிலைப் பொறியாளா் செந்தமிழ்ச்செல்வன் மற்றும் கோயில் அறங்காவல் வாரியத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com