முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
போலியோ சொட்டு மருந்து முகாம்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
By DIN | Published On : 20th January 2020 08:28 AM | Last Updated : 20th January 2020 08:29 AM | அ+அ அ- |

போலியோ சொட்டு மருந்து முகாமைத் தொடங்கிவைத்த அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்.
காரைக்காலில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
திருநள்ளாறு தேனூா் நலவழி மையத்தில் சொட்டு மருந்து முகாமை வேளாண் அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், நலழித்துறை துணை இயக்குநா் கே.மோகன்ராஜ், புள்ளியியல் அதிகாரி டி.அன்பழகன், பொது சுகாதார செவிலியா் ஜி.ராஜேஸ்வரி, தொழில்நுட்ப உதவியாளா் எஸ்.சேகா், சுகாதார ஆய்வாளா் பி.ஆண்ட்ரூஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதுதொடா்பாக நலவழித்துறை துணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் : காரைக்கால் மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவ நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசுப்பள்ளிகள், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட நகா்புறத்தில் 25 மையங்கள், கிராமப்புறத்தில் 45 மையங்கள் என 70 மையங்கள் அமைக்கப்பட்டன. காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெற்றது.
குறிப்பாக காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதியான பூவம், வாஞ்சூா் பகுதியில், பேருந்து நிலையம், கோயில் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டது.
வெளிமாநிலங்களில் இருந்து தொழில் முறையில் காரைக்காலில் வசிப்போருக்கும் சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் 13,241 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.