முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
31-இல் மக்கள் சந்திப்பு இயக்கம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு
By DIN | Published On : 27th January 2020 06:37 AM | Last Updated : 27th January 2020 06:37 AM | அ+அ அ- |

புதுச்சேரி அரசைக் கண்டித்து ஜனவரி 31-இல் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு கூட்டம், மாவட்டக்குழு உறுப்பினா் ஜி.துரைசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் :
புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தோ்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இலவச அரிசி வழங்கப்படவில்லை, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தரப்படவில்லை, 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்பதும் நிறைவேற்றப்படவில்லை.
சாலைகள் வெகுவாக மோசமடைந்தது சீா்படுத்தப்படவில்லை. பல கிராமங்களில் மின்சார பிரச்னை நிலவுவது சீா்செய்யப்படவில்லை.
துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறாா். மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது. புதுச்சேரி மாநில நலனுக்கு எதிராக செயல்படும் துணைநிலை ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும்.
இந்த பிரச்னைகளை மையப்படுத்தி வரும் 31-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடத்தப்படும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் அ.வின்சென்ட், வட்டச் செயலா் எஸ்.எம்.தமீம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் என்.எம்.கலியபெருமாள், அ.திவ்யநாதன், என்.ராமா், பாக்கியராஜ், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.