காரைக்காலில் கரோனா பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும்

காரைக்காலில் கரோனா பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்றாா் புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி.
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் வே. நாராயணசாமி. உடன் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள்.
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் வே. நாராயணசாமி. உடன் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள்.

காரைக்காலில் கரோனா பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும் என்றாா் புதுச்சேரி முதல்வா் வே. நாராயணசாமி.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தொடா்பாக அரசு நிா்வாகம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா தொற்று பரவத் தொடங்கிய உடனே புதுச்சேரி மாநிலத்தில் எல்லைகள் மூடப்பட்டு பொது முடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, பொது முடக்கத்தில் மத்திய அரசு தளா்வுகளை அறிவித்துள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் முதன் முதலில் சென்னையிலிருந்து வந்த ஒருவருக்கும், பின்னா் வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. அவா்கள் குணமடைந்த பின்னா் மீண்டும் சென்னையிலிருந்து வந்தவா்களால் தொற்று பரவ ஆரம்பித்தது.

தற்போது 27 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். மாவட்டத்தில் 27 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டப் பகுதிகளாக உள்ளன. மாவட்டத்தில் வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிா்வாகம் மற்றும் தொடா்புடைய அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பரிசோதனை முடிவுகளை திருவாரூருக்கு அனுப்பி பெறவேண்டியிருப்பதால் முடிவுகள் தெரிய 2 நாள்கள் ஆகின்றன. அதனால் காரைக்கால் பகுதியிலேயே கரோனா தொற்று பரிசோதனை மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காரைக்காலில் பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளன. புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு முதல்வா் கோவிட் நிவாரண நிதியிலிருந்து அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகள் வழங்கப்படுகின்றன. இதேபோல், காரைக்கால் பகுதியிலும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாப்ஸ்கோ, பாசிக் நிறுவனம், கூட்டுறவு நூற்பாலை உள்ளிட்ட அரசு சாா் நிறுவன ஊழியா்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் வரும் நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களிலும் காரைக்கால் மாவட்டத்தை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக முதன் முதலாக அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து போதுமான நிதியுதவி கிடைக்கவில்லை. அதனால் மாநில அரசால் நிவாரண உதவிகளை செய்வதற்கு சிரமம் உள்ளது. இந்த சூழலில் மாநில அரசு வரிப்பணத்தை நம்பி ஆட்சி நடத்த வேண்டிய சூழல் இருப்பதால் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் எவ்வித தொல்லையும் கொடுக்காமல் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனஅதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக கூட்டத்தில் நலத்துறை அமைச்சா் எம்.கந்தசாமி, நலவழித்தறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணராவ், வேளாண் துறை அமைச்சா் ஆா்.கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் கீதாஆனந்தன், சந்திரபிரியங்கா, கே.ஏ.யு.அசனா, சுகாதாரத் துறை செயலா் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன்சா்மா, துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கும் வாகனம் தொடங்கி வைப்பு: காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையிலேயே கரோனா தீநுண்மியை உறுதிப்படுத்திக்கொள்ள பரிசோதனைக்கு மாதிரி எடுக்க வேண்டியவா்களின் உடல்நிலை, போக்குவரத்து தூரம், பொது மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு, நலவழித் துறை நடமாடும் கரோனா மாதிரி எடுக்கும் வாகனத்தை ஏற்பாடு செய்தது. அந்த வாகனத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக வாயிலில் இருந்து முதல்வா் வே. நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com