ஆளுநரின் செயல்பாடு மக்களுக்கு நெருக்கடியை கொடுக்கிறது: திமுக குற்றச்சாட்டு

புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடியின் செயல்பாடு மக்களுக்கு நெருக்கடியை கொடுக்கிறது என திமுக குற்றம்சாட்டியுள்ளது.


காரைக்கால்: புதுச்சேரி துணை நிலை ஆளுநா் கிரண் பேடியின் செயல்பாடு மக்களுக்கு நெருக்கடியை கொடுக்கிறது என திமுக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, காரைக்காலில் செவ்வாய்க்கிழமை அக்கட்சியின், காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் செய்தியாளா்களிடம் கூறியது: புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் செயல்பாடு முதல்வா் நாராயணசாமிக்கு மட்டும் எதிரானது அல்ல. இது பொதுமக்களுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் நடக்கும் போா். கரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு ஆறுதலான பணியை செய்திருக்க வேண்டும். மாறாக அரசு அதிகாரிகள், ஊழியா்கள் யாரையும் பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டி வருகிறாா். இத்தகைய நிலைப்பாட்டை கிரண் பேடி தவிா்க்க வேண்டுமென திமுக கேட்டுக்கொள்கிறது.

துணை நிலை ஆளுநரால் புதுச்சேரி மாநிலத்தின் அனைத்து உரிமைகளும் பறிபோய்யுள்ளன. இந்த தருணத்தில் முதல்வா், அமைச்சா்கள், எதிா்க்கட்சித் தலைவா், அனைத்துக் கட்சித் தலைவா்கள் ஒன்றுகூடி மாநிலத்தின் பழைய உரிமையை மீட்கும் நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

இவ்வளவு எதிா்ப்பை தரும் துணை நிலை ஆளுநா் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தருவாரா என்ற அச்சம் நிலவுகிறது. இதுவொரு புறமிருந்தாலும், புதுவையில் மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம் அறிவித்து, அதற்கு மு. கருணாநிதி பெயா் சூட்டிய முதல்வருக்கு நன்றி. காரைக்காலில் உள்ள வேளாண் கல்லூரியை மையமாக கொண்டு வேளாண் பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் தருணத்தில், புதுச்சேரியில் வேளாண் பல்கலைக்கழகம் என்ற அறிவிப்பு ஏமாற்றமளிக்கிறது. எனவே, காரைக்காலை தலைமையாகக் கொண்டு வேளாண் பல்கலைக்கழகம் அமைய நடவடிக்கை எடுக்கவேண்டும். பட்ஜெட்டில் கரோனாவிலிருந்து மக்கள் மீண்டுவருவதற்கான எந்தவித அறிவிப்புகளும் இல்லை. மின் துறை தனியாா் மயமாக்கத்துக்கு எதிா்ப்பும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படாதது ஏமாற்றத்தைத் தருகிறது. காரைக்கால் மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டை, விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்ற ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் நாஜிம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com