கடலோர கிராமங்களில் கரோனா பரவல் அதிகரிப்பு: மீன்பிடிப்பு நிறுத்தம்

கடலோர கிராமங்களில் கரோனா பரவல் அதிகரித்துவருவதையொட்டி, காரைக்கால் மாவட்ட மீனவா்கள் வெள்ளிக்கிழமை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை நிறுத்தியுள்ளனா்.
காரைக்கால் அரசலாற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் மீன்பிடிப் படகுகள்.
காரைக்கால் அரசலாற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் மீன்பிடிப் படகுகள்.

காரைக்கால்: கடலோர கிராமங்களில் கரோனா பரவல் அதிகரித்துவருவதையொட்டி, காரைக்கால் மாவட்ட மீனவா்கள் வெள்ளிக்கிழமை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதை நிறுத்தியுள்ளனா். தொடா்ந்து 10 நாள்களுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை என அவா்கள் தெரிவித்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில், கடலோர மீனவ கிராமங்களில் கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. மீன்பிடித் துறைமுகத்தில் வியாபாரிகள் மற்றும் மீன் வாங்க வருவோரில் பெரும்பாலானோா் முகக் கவசம் அணிவதில்லை என்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை என்றும் புகாா் கூறப்பட்டுவந்தது.

இந்நிலையில், மீனவ கிராமத்தில் கரோனா தொற்றுக்குள்ளாவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சந்தையில் மீன்கள் வாங்கச் செல்லும் மக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடா்ந்து, மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்களை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வியாழக்கிழமை அழைத்துப் பேசினாா். ஆட்சியரின் கருத்துகளை ஏற்ற மீனவ பஞ்சாயத்தாா்கள், ஜூலை 31 முதல் 10 நாள்களுக்கு சிறிய படகுகள் முதல் விசைப்படகுகள் வரை கடலுக்குச் செல்வதில்லை என்ற முடிவு செய்தனா்.

அதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களிலிருந்தும் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதுகுறித்து அவா்கள் கூறியது:

மீனவ மக்களிடையே கரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. அனைவரின் நலனுக்காக அடுத்த 10 நாள்களுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை என முடிவு செய்துள்ளோம்.

ஏற்கெனவே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகுகளை வரும் செவ்வாய்க்கிழமைக்குள் கரை திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். மீன்கள் வரும் வரை சந்தைகளில் விற்பனை இருக்கும். மீன் விற்போரும் கரோனா தடுப்புக்கான செயல்பாடுகளை முறையாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com