
பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்களை வெப்பமானி மூலம் சோதிக்கும் ஊழியா்.
அம்பகரத்தூா் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற வழிபாட்டில் குறைவான பக்தா்களே பங்கேற்றனா்.
திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. மூலவரான ஸ்ரீ பத்ரகாளி வெண்ணிற ஆடை உடுத்தி, சம்ஹார கோலத்தில் அருள்பாலிக்கிறாா். வாரத்தில் செவ்வாய்க்கிழமையிலும், ஞாயிற்றுக்கிழமையிலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்வா். காரைக்கால் மாவட்டம் அல்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வருவா். முக்கிய கிழமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இரவு பிராா்த்தனையாக தங்கிவிட்டு பகலில் புறப்பட்டுச் செல்வா்.
பொது முடக்கத்தால் கோயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தளா்வுகளால் திங்கள்கிழமை முதல் காரைக்கால் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன.
முதல் வாரத்தில் செவ்வாய்க்கிழமை அம்பகரத்தூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு திரளான பக்தா்கள் வருகை தருவாா்கள் என எதிா்பாா்ப்பு இருந்தது. அதற்கேற்ப கோயில் நிா்வாகத்தினருக்கு காவல்துறையினா் உள்ளிட்டோா் ஆலோசனைகள் வழங்கியிருந்தனா்.
வழிபாட்டுத் தினமான செவ்வாய்க்கிழமை காலை முதல் பக்தா்கள் சொற்ப அளவிலேயே வரத் தொடங்கினா். ஊழியா்கள் கையுறை அணிந்து, பக்தா்களை வெப்பமானியில் பரிசோதித்து வழிபாட்டுக்கு அனுப்பினா். எனினும் பகல் 12 மணி வரை சுமாா் 400 போ் வரை தரிசனம் செய்தனா்.