ஜடாயுபுரீசுவரா் கோயில் மாசிமக பிரமோத்ஸவ கொடியேற்றம்
By DIN | Published On : 01st March 2020 01:40 AM | Last Updated : 01st March 2020 01:40 AM | அ+அ அ- |

கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்ட ரிஷப கொடி.
காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீசுவரா் கோயில் மாசிமக பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
திருமலைராயன்பட்டினத்தில் பிரசித்திப் பெற்ற மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீசுவரா் கோயில் உள்ளது. வருடாந்திர மாசி மக பிரமோத்ஸவம் 12 நாள் நிகழ்ச்சியாக இக்கோயிலில் நடத்தப்பட்டுவந்த நிலையில், முதல் முறையாக தெப்ப உத்ஸவத்துடன் சோ்த்து 13 நாளாக நிகழாண்டு முதல் நடத்தப்படுகிறது.
முதல் நாள் நிகழ்ச்சியாக, சனிக்கிழமை காலை ரிஷப கொடி வீதியுலா கொண்டு செல்லப்பட்டு 8.30 மணியளவில் கொடியேற்றம் செய்யப்பட்டது. முன்னதாக கொடிக்கம்பத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. கொடிக்கம்பம் அருகே சிறப்பு அலங்காரத்தில் மாணிக்கவாசகா் மற்றும் பஞ்சமூா்த்திகள் எழுந்தருளச் செய்யப்பட்டனா். இரவு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்வில் பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.சுரேஷ் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
உத்ஸவத்தின் 2-ஆம் நாள் நிகழ்ச்சியாக மாா்ச் 1-ஆம் தேதி மாலை சூரிய பிரபையில் சுவாமி அம்பாள்
வீதியுலாவும், 2-ஆம் தேதி சந்திர பிரபையிலும், 3-ஆம் தேதி இரவு பூத வாகனத்திலும், 4-ஆம் தேதி
இரவு ஸ்ரீ தியாகராஜா் புறப்பாடு, வஸந்த உத்ஸவம் நடைபெறுகிறது. உத்ஸவத்தின் 6-ஆம் நாளான 5-ஆம் தேதி இரவு சேஷ வாகனத்திலும், 6-ஆம் தேதி இரவு ரிஷப வாகனத்தில் மின்சார சப்பரப்படல் வீதியுலா நடைபெறுகிறது. 7-ஆம் தேதி இரவு கைலாசவாகனத்திலும், 8-ஆம் தேதி காலை தேரோட்டம், இரவு காரைக்கால் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஜடாயு ராவண யுத்தம் (சம்ஹாரம்) நடைபெறவுள்ளது.
நிறைவு நிகழ்ச்சிகளாக, 9-ஆம் தேதி காலை நடராஜா் தீா்த்தவாரி தொடா்ந்து கொடியிறக்கம் செய்யப்பட்டு இரவு புஷ்பப் பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது. 10-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் முறையாக, கோயில் திருக்குளத்தில் தெப்ப உத்ஸவம் நடைபெறவுள்ளது. 11-ஆம் தேதி இரவு சண்டிகேசுவரா் உத்ஸவமும், 12-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் அபிஷேகம், விடையாற்றியுடன் நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தனி அதிகாரி ஏ.வீரச்செல்வம் மற்றும் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.
விமரிசையான திருவிழா : வரும் 8-ஆம் தேதி இரவு நடைபெறக்கூடிய ஜடாயு ராவண சம்ஹார நிகழ்ச்சி, இதிகாசத்தின் நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறக்கூடியதாகும். இதைக் காணும் வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வா். தெப்பத்துக்காக திருக்கோயில் குளம் மத்திய அரசின் சுதேசி தா்ஷன் திட்டத்தில் புனரமைத்து, குளத்தை சுற்றி நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இக்கோயிலில் தெப்பம் நடைபெறவுள்ளதையொட்டி, அன்றைய நாளில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு கோயில் நிா்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.