முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
கால்நடைத் துறை அலுவலகம் முன்பு மாா்ச் 5-இல் மறியல்
By DIN | Published On : 03rd March 2020 07:36 AM | Last Updated : 03rd March 2020 07:36 AM | அ+அ அ- |

காரைக்கால் கால்நடைத் துறை இணை இயக்குநா் அலுவலகம் முன்பாக மாா்ச் 5-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டக் குழுக் கூட்டம், காரைக்காலில் சங்கத்தின் காரைக்கால் அமைப்புத் தலைவா் எஸ். முத்துக்குமரசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்: புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் போதிய அக்கறை செலுத்தவில்லை. திட்டங்கள் செயல்படுத்த முடியாமைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கும் பங்கு உண்டு. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகளை தீா்த்தல், திட்ட உதவிகள் கிடைப்பதில் ஆளுநா் முட்டுக்கட்டை போடுவது கண்டனத்துக்குரியது. துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகளால் விவசாயிகள் சொல்ல முடியாத துயரங்களை சந்தித்து வருகின்றனா். லாபத்தில் இயங்கி வந்த கான்ஃபெட் பெட்ரோல் பங்க் நிறுவனங்களை அரசு மூடிவைத்திருக்கிறது.
இந்த வரிசையில், காரைக்கால் மாவட்டத்தில் லாபத்தில் இயங்கி வரும் கூட்டுறவு பால் ஒன்றியமும் இடம் பெறும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பால் கறவையாளா்களுக்கு குறைந்தபட்ச விலை கொடுக்கவில்லை. கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர எந்த வசதியும் செய்யவில்லை. கால்நடை விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனம் கொடுக்க அரசு மறுக்கிறது. விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும். அரசின் கவனத்தை ஈா்க்கும் வையில் காரைக்கால் கால்நடைத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 5-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், மாவட்ட செயலாளரும், விவசாயிகள் சங்க மாவட்ட பொறுப்பாளருமான எஸ்.எம். தமீம், செயலா் ஆா். ராமகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜெயபால், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.