முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
லஞ்ச வழக்கு: குடிசை மாற்று வாரிய ஊழியா்கள் 3 பேருக்கு சிறை தண்டனை
By DIN | Published On : 03rd March 2020 07:33 AM | Last Updated : 03rd March 2020 07:33 AM | அ+அ அ- |

குடிசை மாற்று வாரியத்தின் வீடு கட்டும் திட்ட நிதி தருவதற்காக, பயனாளியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஒருவருக்கும், பயனாளியின் கையெழுத்தை போலியாக போட்டு பணத்தை பெற்ற ஊழியா் இருவருக்கும் காரைக்கால் நீதிமன்றம் திங்கள்கிழமை சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
புதுச்சேரி அரசின் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டும் திட்ட நிதியைப் பெறும் வகையில், காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியை சோ்ந்த தமிழ்ச்செல்வி என்பவா் விண்ணப்பம் செய்திருந்தாா். திட்டத்தின் 3 தவணைகளில் ஏற்கெனவே 2 தவணைத் தொகை பெற்ற நிலையில், 3-ஆவது தவணையைப் பெற வாரியத்தை 2012 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாத பிற்பகுதியில் அணுகியபோது, அலுவலக தற்காலிக ஊழியா் காளிதாஸ் என்பவா் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
இதுகுறித்து, தமிழ்ச்செல்வி அவரது சகோதரா் சீனிவாசனிடம் தெரிவித்தாா். இவா் சிபிஐக்கு புகாா் அளித்தாா். சிபிஐ அதிகாரிகள் வழிகாட்டலில் 28.2.2012-அன்று காளிதாஸ் கோரிய லஞ்சத் தொகையை கொடுத்தபோது, மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள் காளிதாஸை கைது செய்தனா்.
இதுகுறித்த, வழக்கு காரைக்கால் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை திங்கள்கிழமை நிறைவடைந்த நிலையில், காளிதாசுவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி காா்த்திகேசன் உத்தரவிட்டாா்.
சிபிஐ இந்த வழக்கு குறித்து விசாரணை செய்தபோது, தமிழ்ச்செல்வி பெறவேண்டிய 3-ஆவது தவணைத் தொகையை, போலியாக கையெழுத்து போட்டு குடிசை மாற்று வாரிய உதவிப் பொறியாளா் அருள்மொழி, மஸ்தூரான ஆண்ட்ரூம் மில்லா் ஆகியோா் எடுத்திருந்தது தெரியவந்தது. இவா்கள் மீது சிபிஐ, தனியாக ஒரு வழக்கை காரைக்கால் நீதிமன்றத்தில் தொடுத்தது. இதுகுறித்த அனைத்துக் கட்ட விசாரணை நிறைவையொட்டி இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிபதி காா்த்திகேசன் விதித்தாா்.