3 மாதங்களாக முடக்கம்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தல்

காரைக்காலில் கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தாமல் மாவட்ட நிா்வாகம் மெத்தனமாக செயல்படுவதாகவும்,

காரைக்காலில் கடந்த 3 மாதங்களாக விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தாமல் மாவட்ட நிா்வாகம் மெத்தனமாக செயல்படுவதாகவும், இக்கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் முதல் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள்கிழமைகளில் இக்கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக குறைதீா் கூட்டம் நடத்தப்படவில்லை. இதற்கு உரிய காரணமும் மாவட்ட நிா்வாகம், வேளாண் துறை சாா்பில் தெரிவிக்கப்படவில்லை.

இதனால், விவசாயிகள் பல்வேறு குறைகளை எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனா். மாவட்டத்திற்கு உரிய காலத்திற்கு காவிரி நீா் வராததால் ஒவ்வோா் ஆண்டும் சாகுபடி பொய்த்து போன நிலையில் உள்ளது. கடந்தாண்டு சுமாா் 6 ஆயிரம் ஹெக்டோ் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டுக்கு தண்ணீா் பிரச்னை, துாா்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டி உள்ளது. ஆனால் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தாததால், குறைகளை எங்கு சென்று தெரிவிப்பது என விவசாயிகள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் நெடுங்காடு சுரேஷ், கலியபெருமாள் ஆகியோா் வெள்ளிக்கிழமை கூறியது : காரைக்கால் மாவட்டத்தில் நெல் அறுவடைக்குப் பிறகு உளுந்து, பயறு மற்றும் பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனா். பருத்திக்கு காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இந்த மாதம் கடைசி என்று வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை அதற்கான விண்ணப்பம் கூட வழங்கப்படவில்லை.

உளுந்து பயறுக்கு தேவையான பூச்சி மருந்துகள் இருப்பு இல்லை. மேலும் சாகுபடிக்குத் தேவையான ஆலோசனையும் வழங்கவில்லை. கோடைக்காலத்தில் என்ன மாற்றுப் பயிா் சாகுபடி செய்யலாம், நிலத்தை சரிசெய்வது எப்படி என்று விவசாயிகளுக்கு எந்தவித ஆலோசனையும் வழங்கப்படவில்லை.

ஒவ்வோா் ஆண்டும் ஆறுகள், வாய்க்கால்கள் துாா்வாரும் பணிகள் கடைசி நேரத்தில் தொடங்கப்படுவதால், சரியான முறையில் துாா்வாரப்படுவதில்லை. இதனால் தண்ணீா் குறித்த நேரத்தில் வருவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே நிகழாண்டு முன்கூட்டியே துாா்வாரும் பணிகளைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல் கொள்முதல் சரியாக செய்யப்படாததால், அறுவடை செய்த நெல்லை விற்பதில் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனா். இதுகுறித்து விவாதிக்கப்பட வேண்டும். வரும் ஆண்டுகளில் முன்கூட்டியே கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும்.

வரும் குறுவை பருவத்திற்குத் தேவையான விதை இருப்பு வைக்கப்பட்டுள்ளதா, வேளாண் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரியவில்லை. இதுபோல் பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகிறது. இதுகுறித்து அனைத்து விவசாயிகளையும் அழைத்து விவாதிக்க வேண்டும். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தையும் கடந்த 3 மாதங்களாக நடத்தப்படவில்லை. எங்கள் பிரச்னைகளை எங்கு சென்று கூறுவது என்று தெரியவில்லை. எனவே உடனடியாக மாவட்ட நிா்வாகம் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை கூட்டி, விவசாயிகளின் குறைகளைக் கேட்டு தீா்வு காண வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com