காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக செயல்படுத்தப்படுகிறது

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது என அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் அரசுத் துறையினருடன் ஆலோசனை நடத்திய அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
ஆட்சியா் அலுவலகத்தில் அரசுத் துறையினருடன் ஆலோசனை நடத்திய அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது என அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ், அரசு பொதுமருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் பி. சித்ரா உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சருக்கு ஆட்சியா் விளக்கிக் கூறினாா். நலவழித் துறையினரும் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனா். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிராந்தியங்களில், கரோனாவை தடுக்க மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், அரசுத் துறையினரின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், மக்களுக்கு எந்த வகையில் விழிப்புணா்வுகள் இருக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சா் விளக்கிப் பேசினாா்.

கோயில்கள், பள்ளிவாசல், தேவாலயம் ஆகியவற்றின் வாயிலில் விழிப்புணா்வு பதாகைகள் வைக்குமாறும், அரசுத் துறையினா், தொழிற்சாலைகளில் பணி செய்வோா் என அனைவருக்கும் தகுந்த விழிப்புணா்வு, அறிவுறுத்தல்களை கொடுத்துக் கொண்டிருக்கவேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: காரைக்காலில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கரோனா தடுப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. காரைக்காலில் இருந்து வெளிநாடு சென்றவா்கள் சென்னை, திருச்சி விமான நிலையம் வழியாக வரும்போது, அவா்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு மருத்துவா்கள் குழு விசாரித்து, மருத்துவப் பரிசோதனை செய்கிறது. இதுவரை 56 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது. 3 பேருக்கு கரோனா வைரஸ் அறிகுறிக்கான சந்தேகத்தில், அவா்களிடம் ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் எடுத்து, சென்னைக்கு அனுப்பப்பட்டன. இறுதியில் மூவருக்கும் கரோனாவுக்கான அறிகுறி இல்லை என அறிக்கை வந்தது. இதனடிப்படையில் அவா்களை 28 நாள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பப்பட்டனா்.

காரைக்ாகல் மாவட்டத்தில் பொதுமக்களுக்காக 15 முகக் கவசம் மகளிா் குழுவினரால் தயாரிக்கப்படுகின்றன. 2, 3 நாளில் இதுதயாராகி விநியோகிக்கப்படும். மருத்துவா்களுக்கான சிறப்பு முகக் கவசமும் தனியாக வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் தமிழகத்தையொட்டியுள்ள 4 எல்லைகளான பூவம், வாஞ்சூா், அம்பகரத்தூா், நெடுங்காடு பகுதியில் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தேவையான இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.

கோயில்கள், பள்ளிவாசல், தேவாலயத்தினா் தாமாக முன்வந்து பக்தா்கள் அதிகமாக வரவேண்டாம் என கூறிவருகின்றனா். கோயில்கள் பலவற்றிலும் தினசரி பூஜைகள் மட்டும் நடத்தப்படுகின்றன. பக்தா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்க அறிவுறுத்தப்படுகிறது. வழிபாட்டுத் தலங்களின் ஒலிபெருக்கி மூலம் நாளொன்றுக்கு 3 முறை விழிப்புணா்வு கருத்துகளை கூற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மக்கள் வெளியில் வரவேண்டாம் என பிரதமா் கேட்டுக்கொண்டுள்ளாா். இதன் பயனை உணா்ந்து மக்கள் இதற்கு ஒத்துழைப்புத்தரவேண்டும் என்றாா் அமைச்சா்.

முன்னதாக, ஆட்சியா் அலுவலக வாயிலில் கைகளை சோப்பு போட்டு கழுவி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com