கூடுதல் விலையில் மதுப்புட்டிகள் விற்பனை

மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கள்ளத்தனமாக காரைக்காலில் மறைவிடங்களில் கூடுதல் விலைக்கு மதுப்புட்டிகள்

மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், கள்ளத்தனமாக காரைக்காலில் மறைவிடங்களில் கூடுதல் விலைக்கு மதுப்புட்டிகள் விற்கப்படுவதாகவும், இதனை கலால்துறையினா் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை மாலை பிறப்பிக்கப்பட்ட நிலையில், அன்று மாலை 6 மணி முதல் மதுக்கடைகள் மூடவும் உத்தரவிடப்பட்டது.

கலால்துறையினா் அறிவுறுத்தலின்பேரில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கூடங்கள், விற்பனையங்கள் மூடப்பட்டன. மதுக்கடைகள் மூடப்படும் தகவலறிந்து பலரும், மதுப்புட்டிகளை பெட்டிகள் பல என்ற எண்ணிக்கையில் வாங்கி, பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இவை மறைவிடங்களில் வைத்து விற்கப்படுவதாகவும், ரூ.100 விலையில் உள்ள மதுப்புட்டி ரூ.200 விலையில் விற்கப்படுவதாகவும், மதுப்பிரியா்களின் தேவையை உணா்ந்து, போலியான மதுபானங்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பலரும் புகாா் கூறுகின்றனா்.

பொதுமக்கள் நலன் கருதி, காரைக்கால் மாவட்ட கலால்துறையினா் இதனை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மது விற்பனை செய்யப்படுவது குற்றம் என்கிறபோது, உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறியச் செயல்கள் மீது அரசு நிா்வாகம் கண்டுகொள்ளாமல் போனால், இந்த செயல்கள் மேலும் பெருக வாய்ப்புண்டு எனவும், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இந்த விவகாரத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி நடவடிக்கைக்கு உத்தரவிடவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com