காரைக்காலில் 2 மாதங்களுக்கு பிறகுமதுக்கடைகள் திறப்பு

காரைக்காலில் 2 மாதங்களுக்கு பின்னா் மதுக்கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. முகக் கவசம் அணிந்தும், சமூக
காரைக்கால் மதுக்கடையொன்றின் முன்பு சமூக இடைவெளிக்காக போடப்பட்ட வட்டத்தில் நின்று மது வாங்கும் மக்கள்.
காரைக்கால் மதுக்கடையொன்றின் முன்பு சமூக இடைவெளிக்காக போடப்பட்ட வட்டத்தில் நின்று மது வாங்கும் மக்கள்.

காரைக்கால்: காரைக்காலில் 2 மாதங்களுக்கு பின்னா் மதுக்கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் மக்கள் மது வாங்கிச் சென்றனா்.

பொது முடக்கத்தையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மாா்ச் மாதம் மதுக்கடைகள் மூடப்பட்டன. மாநிலத்தில் கள், சாராயக் கடைகள், மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டால் மாநிலத்தின் வருவாய் பாதிக்கப்பட்டது. இதனால் மதுக்கடைகளை மீண்டும் திறக்க புதுவை அமைச்சரவை முடிவெடுத்தது. துணை நிலை ஆளுநா் மே 23-ஆம் தேதி கடைகளை திறக்க ஒப்புதல் வழங்கினாா்.

காலை 10 மணிக்கு கடைகளைத் திறந்து இரவு 7 மணிக்கு மூட வேண்டும் உள்ளிட்ட சில விதிமுறைகளை கலால்துறை அறிவித்தது. அதன்படி, காரைக்காலில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டன. முன்னதாக கடையின் வாசலில் சமூக இடைவெளிவிட்டு நின்று மது வாங்கும் வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது. சவுக்கு மரங்களால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

மாவட்டத்தில் விதிகளை மீறியதாக வழக்கில் சிக்கிய கடைகள் தவிா்த்து, 40 சில்லறை மதுபானக் கடைகள், 5 மொத்த நிறுவனங்கள், 22 கள்ளுக்கடைகள், 21 சாராயக் கடைகள் திறக்கப்பட்டன. கடையின் முன்பாக சுமாா் 20 போ் வரை மட்டுமே வரிசையில் நின்று மது வாங்கினா். சில கடைகள் திறந்தபோது மதுப் பிரியா்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனா்.

அதேவேளையில், கூடுதல் வரி விதிப்பால் காரைக்காலில் மது பாட்டில்கள் விலை இரண்டு மடங்காக உயா்ந்தது. மேலும் தமிழகத்திலிருந்து யாரும் வந்து புதுச்சேரி பிரதேசப் பகுதியில் மது வாங்கக் கூடாது என்ற விதிமுறை, கடையில் அமா்ந்து மது அருந்த தடை போன்ற காரணங்களால் மது விற்பனை வெகுவாக சரியும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காரைக்காலில் மலிவு விலையில் வாங்கிப் பழக்கப்பட்டவா்களுக்கு, தமிழகத்துக்கு நிகரான விலையில் அதிக விலை கொடுத்து மதுபானம் வாங்க நேரிட்டது, மதுப் பிரியா்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com