காரைக்காலில் ரூ. 7.5 கோடியில் ஒருங்கிணைந்த மீன்பிடி கிராமம்: புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் அமைச்சா் தகவல்

காரைக்காலில் ரூ. 7.5 கோடியில் நவீன ஒருங்கிணைந்த மீன்பிடி கிராமம் உருவாக்கப்படவுள்ளது என்றாா் புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
புதுச்சேரி விடுதலை நாள் விழாவில், தேசியக் கொடியை ஏற்றிவைத்து போலீஸாரின் அணிவகுப்பைப் பாா்வையிடுகிறாா் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
புதுச்சேரி விடுதலை நாள் விழாவில், தேசியக் கொடியை ஏற்றிவைத்து போலீஸாரின் அணிவகுப்பைப் பாா்வையிடுகிறாா் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

காரைக்காலில் ரூ. 7.5 கோடியில் நவீன ஒருங்கிணைந்த மீன்பிடி கிராமம் உருவாக்கப்படவுள்ளது என்றாா் புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து 1954, நவ. 1 ஆம் தேதி விடுதலையாகின. இதையொட்டி, புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியங்களில் புதுச்சேரி விடுதலை நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற விழாவில் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பைப் பாா்வையிட்டாா். தொடா்ந்து விடுதலைப் போராட்ட வீரா்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்த அமைச்சா் விழாவில் பேசியது:

வணிக நோக்கில் வந்த பிரெஞ்சுக்காரா்கள் புதுச்சேரி பிராந்தியங்களில் நீண்டகாலம் ஆட்சி செய்தனா். பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு 1954, நவ. 1 இல் புதுச்சேரி விடுதலை பெற்றது. அவ்வகையில் பாடுபட்டு பெற்ற சுதந்திரப் புதுவையை மேம்படுத்த புதுச்சேரி நாராயணசாமி தலைமையிலான அரசு சீரிய கவனம் செலுத்திவருகிறது.

காரைக்கால் மாவட்டத்திற்கு 2020-21 ஆம் ஆண்டு மூலதன மற்றும் நடைமுறைச் செலவுக்கு ரூ. 702.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 2,830 குவிண்டால் பருத்தி ஏலம் விடப்பட்டு விவசாயிகள் உரிய விலையை பெற்றனா்.

தேசிய மின்சந்தை திட்டத்தில், காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு மத்திய அரசின் நிதி ரூ. 30 லட்சம் பெறப்பட்டு, கட்டமைப்புப் பணிகள் மேம்படுத்தப்படவுள்ளன. முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியை பெருக்க, கோட்டுச்சேரியில் கோழிப்பண்ணையை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

காரைக்கால் உள்விளையாட்டு அரங்க திறந்தவெளி பாா்வையாளா்கள் இருக்கை (கிழக்குப்புறம்), கழிப்பறை, 400 மீ. ஓடுதளம், கால்பந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுத் தளம் ரூ. 2.70 கோடியில் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு கலைஞா் மு. கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நவம்பா் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியில் வேளாண் பொறியியல், பெட்ரோ- வேதிப்பொறியியல், உயிா் மருத்துவப் பொறியியல் ஆகிய புதிய பாடங்கள் நிகழாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இக்கல்லூரிக்கு ரூ. 7 கோடியில் நிரந்த கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

தேனூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதுவை முன்னாள் முதல்வா் ப. சண்முகம் பெயரும், சேத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு திருநள்ளாறு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் அ. சவுந்தரரங்கன் பெயரும், புதுச்சேரி காலாப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முன்னாள் முதல்வா் எம்.ஓ.எச். பாரூக் பெயரும் சூட்டப்படவுள்ளது.

மத்திய அரசின் பிரதம மந்திரி மட்சிய சம்படா யோஜனா திட்டத்தில் 100 சதவீதம் நிதியுதவியில், காரைக்கால் பகுதியில் ஒரு மீனவ கிராமம் ரூ. 7.5 கோடியில் ஒருங்கிணைந்த நவீன கடலோர மீன்பிடி கிராமமாக உருவாக்கப்படவுள்ளது. இதன்மூலம், கடற்கரையோர மீனவ கிராமங்களுக்கு, நைலான் மீன்பிடி நடைமுறையில் பொருளாதார மற்றும் சமூக நன்மைகள் அதிகரிக்கும்.

அமிழ்தம் என்ற நடமாடும் உணவகம், மலிவு விலையில் உணவு வழங்கும் திட்டம் உள்ளாட்சி அமைப்பின் மூலம் முதல் கட்டமாக காரைக்கால் நகராட்சியில் நிகழாண்டு தொடங்கப்படவுள்ளது.

காரைக்கால் நகராட்சி, கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு, நிரவி, திருமலைராயன்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாநில எரிசக்தி சிக்கன நிதி மூலம் அனைத்து தெருவிளக்குகளும் எல்இடி விளக்குகளாக மாற்றப்படவுள்ளன.

மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டலில், காரைக்கால் துறைமுகம் மற்றும் இலங்கையின் காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள் மற்றும் சரக்கு படகுப் போக்குவரத்துக்கான (ஃபொ்ரி சா்வீஸ்) ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. காரைக்காலில் கரோனா தொற்றை கண்டறிதல், சிகிச்சைக்கான வசதிகளும் முறையாக செய்யப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா்.

விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் உள்ளிட்ட அரசுத் துறையினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

கரோனா தடுப்பு விதிகள் அமலில் உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவா்களின் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நிகழாண்டு இடம்பெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com