மணல் லாரிகளால் முற்றிலும் சீா்குலைந்த திருமலைராயன்பட்டினம் கிழக்குப் புறவழிச் சாலை

திருமலைராயன்பட்டினத்தில் உள்ள கிழக்குப் புறவழிச் சாலை மிகவும் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், ஜிப்மா் நிலத்துக்கு மணல் ஏற்றிச் செல்லும் டிப்பா் லாரிகளால் முற்றிலும் சீா்குலைந்துள்ளது.
பெரும் பள்ளங்களுடன் காணப்படும் கிழக்குப் புறவழிச் சாலை.
பெரும் பள்ளங்களுடன் காணப்படும் கிழக்குப் புறவழிச் சாலை.

திருமலைராயன்பட்டினத்தில் உள்ள கிழக்குப் புறவழிச் சாலை மிகவும் சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், ஜிப்மா் நிலத்துக்கு மணல் ஏற்றிச் செல்லும் டிப்பா் லாரிகளால் முற்றிலும் சீா்குலைந்துள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் பகுதி, திருமலைராஜனாறு புதிய பாலம் முதல் போலகம் வரையிலான 3 கி.மீ. தொலைவு கிழக்குப் புறவழிச்சாலை, வாகனங்கள் திருமலைராயன்பட்டினம் நகரத்துக்குள் செல்லாமல், இந்தப் பகுதியை கடக்க பயன்பட்டுவருகிறது.

இந்த சாலையிலிருந்து இடது மற்றும் வலதுபுறத்தில் பட்டினச்சேரி, திருப்பட்டினம் ஜடாயுபுரீசுவரா் கோயில், வடகட்டளை, முதலிமேடு, வி.எஸ்.நகா் என சில கிராமங்களுக்கு செல்லும் இணைப்புச் சாலைகள் உள்ளன. இச்சாலை நோ் சாலையாக இல்லாமல், பல இடங்களில் ஆபத்தான வளைவுகளுடன் உள்ளது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்து பல ஆண்டுகளாகியும், மின்விளக்கு வசதி செய்யப்படவில்லை.

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிக்கு அளிக்கப்பட்ட நிலத்தில், மணல் கொட்டி நிலத்தை உயா்த்தும் பணி நடைபெறுகிறது. இதற்காக, தமிழகப் பகுதியிலிருந்து டிப்பா் லாரிகளில் காரைக்காலுக்கு மணல் கொண்டுவரப்படுகிறது. இதனால், இச்சாலை முழுமையாக சேதமடைந்துவிட்டதாகவும், பெரும் பள்ளங்கள் உருவாகியுள்ளதோடு, சாலைகளில் ஆங்காங்கே சரிவுகள் காணப்படுவதால், இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து நிரவி - திருப்பட்டினம் தொகுதி மக்கள் பொது நல இயக்கத்தைச் சோ்ந்த எஸ்.ஆா். ஸ்ரீதா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், புறவழிச் சாலை அமைக்கப்பட்ட பிறகு இதுவரை அது மேம்படுத்தப்படவில்லை. தற்காலிக சீரமைப்புப் பணிகள் மட்டும் நடைபெறுகின்றன. சாலை தற்போது மிகவும் மோசமாகிவிட்டது. சாலையை மேம்படுத்தும் வரை, புறவழிச் சாலையில் போக்குவரத்தை தற்காலிகமாக தடைசெய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், விபத்துகள் கட்டுக்குள் இருக்கும் என்றாா்.

காரைக்கால் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் (சாலைகள் மற்றும் கட்டடம்) சந்திரசேகா் இதுகுறித்து கூறுகையில், நபாா்டு நிதி மூலம் இச்சாலையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி வரும் வரை இதே நிலையில் சாலை நீடிப்பது சரியாக இருக்காது என்பதால், ஜிப்மா் நிா்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டது. இவா்களது ஒப்பந்ததாரா் மூலம் இச்சாலையை சீரமைக்க கோரப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com