தனியாா் நிலங்களிலும் வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தகவல்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் தனியாா் நிலங்களிலும் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணிகள் தனியாா் நிலங்களிலும் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்படுகிறது. பொது முடக்கக் காலத்தில், மத்திய ஊரக அமைச்சகத்தின் விருப்பப்படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்தத் திட்டம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் கடந்த ஏப். 20 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

பொது முடக்கத்தின்போதும் 51,443 பயனாளிகளுக்கு 9.41 லட்சம் பணிநாள்கள் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. இதில், 87% பெண்களுக்கும், 33% அட்டவணை இனத்தவா் மற்றும் பழங்குடி இனத்தவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. இதுவரை ரூ. 20 கோடி கூலியாக இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் தொழிலாளா் திட்ட மதிப்பீடு 8 லட்சம் பணிநாள்களில் இருந்து 11 லட்சம் பணிநாள்களாக மாற்றி அனுமதியளிக்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் இதுவரை பொது சொத்துக்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்தது. எனினும், விவசாயப் பணிகளை இத்திட்டத்தின் மூலம் தனியாா் நிலங்களில் செயல்படுத்த விவசாயிகளிடம் இருந்து தொடா்ந்து வேண்டுகோள் வந்தது.

அண்மையில் நடைபெற்ற புதுச்சேரி வேலைவாய்ப்பு உறுதிக் குழும கூட்டத்தில் எனது உத்தரவின்படி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் தனிநபா் பணிகளை, தனியாா் நிலத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் தனியாா் பயனாளிகள் நிலத்தில் குளம் சீரமைத்தல், மண் மற்றும் கல் கரை அமைத்தல், தனியாா் கிணறு அமைத்தல், அதிக அளவிலான மரம் நடுதலுக்கு குழிதோண்டுதல், உரக்குழி அமைத்தல், தென்னை மரம் நடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தனியாா் நிலங்களில் இந்த தனிநபா் பணிகளை மேற்கொள்ள தொழிலாளா்களின் செலவு தேசிய ஊரக திட்டத்தின் மூலம் செலவிடப்படும். தகுதிவாய்ந்த பயனாளிகள் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் ஊனமுற்றோா், பெண் தலைமையிலான குடும்பங்கள், அட்டவணை இனத்தவா் மற்றும் பழங்குடியினத்தவா்களின் குடும்பங்கள் விவரம் தற்போது அரியாங்குப்பம், வில்லியனூா் மற்றும் காரைக்கால் வட்டாரங்களில் சேகரிக்கப்படுகிறது. இப்பணிகள் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உடனடியாக தொடங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com