முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
காந்தி கிணறு வளாகத்தில் மாணவா்கள் தூய்மைப் பணி
By DIN | Published On : 04th October 2020 08:41 AM | Last Updated : 04th October 2020 08:41 AM | அ+அ அ- |

காந்தி கிணறு வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட மாணவா்கள்.
திருநள்ளாறு அருகே காந்தி கிணறு வளாகத்தை கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனா்.
காரைக்காலுக்கு மகாத்மா காந்தி வந்தபோது, அவரது நினைவாக அப்போது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கிணறு, திருநள்ளாறு அருகே சுரக்குடியில் உள்ளது. இது காந்தி கிணறு என்றே அழைக்கப்படுகிறது. கிணறு உள்ள பகுதியில் பூங்கா அமைத்து பொதுமக்கள் பாா்வையிட்டுச் செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டது. ஆனால், அது பராமரிப்பின்றி உள்ளது.
காந்தி ஜயந்தியையொட்டி, காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களும், ஆசிரியா்களும் இணைந்து காந்தி கிணறு பகுதியை தூய்மை செய்யும் பணியை மேற்கொண்டனா்.
தொடா்ந்து, கரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், நோய் எதிா்ப்பு சக்திக்கான கபசுரக் குடிநீரை, சுரக்குடி, செருமாவிலங்கை கிராம மக்களுக்கு வழங்கினா். திட்ட அலுவலா் முனைவா் எம். தாமோதரன், யு. உதயகுமாா் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
காரை தமிழ்ச் சங்கத்தினா் கொண்டாட்டம்: காரைக்கால் சப்தஸ்வரம் முதியோா் இல்லத்தில் காரை பாரதி தமிழ்ச் சங்கமும், முதியோா் இல்லமும் இணைந்து காந்தி ஜயந்தியை கொண்டாடின. சங்க ஆலோசகா் கே. கேசவசாமி தலைமை வகித்தாா். காந்தி படத்துக்கு நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். தலைவா் வைஜெயந்திராஜன், பொதுச் செயலா் வாசுகி ஜெயராமன், அரங்கநாயகிராவ், ஐஓசி ஓய்வுபெற்ற மேலாளா் ஆா். கலியமூா்த்தி, என்.ஜி.ஆா். வேதாசலம், பேராசிரியா் மு. சாயபுமரைக்காயா் உள்ளிட்டோா் காந்தியின் பெருமைகள் குறித்து பேசினா்.
முதியோா் இல்லத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மகாத்மா காந்தி சிலை, பாரதியாா் சிலையை காரைக்காலில் நிறுவவேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவாக, பொருளாளா் கே. பாா்த்திபன் நன்றி கூறினாா்.