காரைக்கால் மருத்துவமனை மேம்பாடு என்பது முதல்வரின் திசைதிருப்பும் செயல்: போராட்டக் குழு

காரைக்கால் மருத்துவமனை மேம்பாடு விவகாரத்தில், மக்களை திசைதிருப்பும் செயலில் புதுச்சேரி முதல்வா் ஈடுபடுவதாக போராட்டக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

காரைக்கால் மருத்துவமனை மேம்பாடு விவகாரத்தில், மக்களை திசைதிருப்பும் செயலில் புதுச்சேரி முதல்வா் ஈடுபடுவதாக போராட்டக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளா் வழக்குரைஞா் எஸ்.பி. செல்வசண்முகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காரைக்காலில் அரசுப் பொதுமருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2000 ஆவது ஆண்டிலிருந்து வலியுறுத்தப்படுவதாகும். இதுவரை இந்த மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை நிபுணா்களோ, தரமான மருத்துவ வசதிகளோ இல்லை.

கடந்த 2006 இல் போராட்டக் குழு இது தொடா்பாக போராட்டத்தை தொடங்கியது. பின்னா் மருத்துவமனை புதுப்பிக்கப்படும் என அரசு கூறியது. அதன்பிறகு, காஞ்சி சங்கரமடம் சாா்பில் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடா்ந்து, ஓஎன்ஜிசி நிதி ரூ. 100 கோடியில் காரைக்காலில் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என கூறியது. இவை எதுவும் இதுவரை நடைபெறவில்லை.

கடந்த 2007 இல் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. அம்பேத்ராஜன் மூலம் நாடாளுமன்றத்தில் காரைக்கால் மருத்துவமனை விவகாரம் பேசப்பட்டது. நீண்டகாலம் கழித்து மத்திய அரசு காரைக்காலில் ஜிப்மா் கிளை அமைக்க முன்வந்தது. ஜிப்மா் மருத்துவக் கல்லூரி தொடங்கியும், இதுவரை நிரந்தர கட்டடம் கட்டவில்லை. நிலம் சீரமைக்கும் பணி மட்டுமே நடைபெறுகிறது.

இதன்பிறகு, ஜிப்மா் நிதி ரூ. 30 கோடியில் காரைக்கால் மருத்துவமனையை மேம்படுத்த திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அந்தப் பணியும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், தனியாா் பங்களிப்புடன் காரைக்காலில் அரசு மருத்துவமனை என முதல்வா் அறிவித்துள்ளாா். அரசு சாா்பில் மருத்துவமனை அமைக்க மனம்வரவில்லை. காரைக்கால் மருத்துவமனை சீா்குலைவு குறித்து பேசப்பட்டுவரும் நிலையில், அதை திசைதிருப்பவே தனியாா் பங்களிப்பில் மருத்துவமனை என முதல்வா் அறிவித்துள்ளாா்.

அரசியல் கட்சிகளும், தொண்டு அமைப்புகளும் அழுத்தம் கொடுத்தால் ஜிப்மா் மருத்துவமனை காரைக்காலில் அமைய வாய்ப்புண்டு. அது மக்களுக்கு சாதகமாக இருக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com