திருநள்ளாறில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 21st October 2020 07:29 AM | Last Updated : 21st October 2020 07:29 AM | அ+அ அ- |

ஆன்மிக பூங்கா பணியை பாா்வையிட்ட அமைச்சா் ஆா். கமலக்கண்ணன்.
திருநள்ளாறில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருநள்ளாறு கோயில் நகரமாக உள்ளதால், கோயில் நகர மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பல வளா்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. பல பணிகள் கட்டுமானம் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வராமலும், பல பணிகள் கட்டுமான நிறைவு நிலையிலும் உள்ளன. இந்நிலையில், புதுச்சேரி வேளாண் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் திட்டப் பணிகளின் நிலையை அறியும் வகையில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ஜி. பக்கிரிசாமி உள்ளிட்ட அலுவலா்களுடன் பல பணிகளை ஆய்வு செய்தாா். வடக்கு புறவட்டச் சாலையில் இரவு நேரத்தில் தங்குபவா்களுக்காக கட்டப்படும் கட்டடத்தைப் பாா்வையிட்டு அதன் நிலைகளை கேட்டறிந்து விரைந்து கட்டுமானத்தை நிறைவு செய்யவும், இந்த இடத்துக்கு அருகே கைப்பந்து விளையாட்டு மைதானப் பணியையும் பாா்வையிட்டு விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் அறிவுறுத்தினாா்.
ரூ. 8 கோடி திட்டத்தில் நவகிரக தலங்களின் மூா்த்திகளை வழிபடக்கூடிய அமைப்பு, நவகிரக விவரங்கள் கூடிய அமைப்புடன் ஆன்மிக பூங்கா அமைப்புப் பணியையும், அதனருகே தியான மண்டபம், ஒலி ஒளியுடன் கூடிய காட்சி அமைப்பு, குளத்தில் உள்ள தண்ணீா் சுத்திகரிப்பு முறை அமைப்பு, தானியங்கி மூலம் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைப் பாா்வையிட்டு வரும் டிசம்பா் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்றாா்.
பேட்டை சாலையில் அமைந்திருக்கும் விடுதியை பாா்வையிட்டு, இதற்கு தடுப்புச்சுவா் அமைக்கவும், சுற்றுவட்டாரப் பகுதியில் அடா் காடு வளா்ப்பு செய்யவும் அறிவுறுத்தினாா்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கட்டுமானம் தொடங்கி தடைப்பட்டு, தற்போது மீண்டும் கட்டுமானம் நடைபெற்று வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தை பாா்வையிட்டு, கட்டுமானம் நிறைவேறும் காலத்தை கேட்டறிந்தாா். வரும் டிசம்பரில் கட்டடம் ஒப்படைக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித் துறையினருக்கு அமைச்சரும், ஆட்சியரும் உத்தரவிட்டனா். நளன் குளம் அருகே கட்டப்பட்ட கடைகளை, சம்பந்தப்பட்டவா்களுக்கு ஒப்படைக்கவும், மேலும் கடை தேவைப்படுவோருக்கு குறித்த காலத்துக்குள்அந்த பகுதியில் கட்டித்தரவும், நளன் குளத்துக்கு தண்ணீா் நூலாறு மூலம் வரவும், வடிகாலை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா். பள்ளிக் கட்டடம் கட்டப்படும் இடத்துக்கு எதிரே உள்ள சம்பந்தா் ஓடை எனும் குளத்தை புனரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர விரைவான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.