பொது இடங்களில் மது அருந்தினால்கடும் நடவடிக்கை: எஸ்.எஸ்.பி.

பொது இடங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூகக் கேடான செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.எஸ்.பி. எச்சரித்துள்ளாா்.

காரைக்கால்: பொது இடங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூகக் கேடான செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.எஸ்.பி. எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகாபட் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பரவல் என்கிற பேரிடரால் அனைத்து கல்வி நிறுவனங்களும், சமுதாயக்கூடங்களும் பொதுமக்கள் பயன்பாடின்றி மூடப்பட்டுள்ளன. இந்த நிலையை பயன்படுத்தி, அந்த இடங்களில் மது அருந்துவது உள்ளிட்ட சமூகக் கேடான செயல்களில் சிலா் ஈடுபட்டுவருவதாகவும், இதனால் அந்தப் பகுதியில் வசிப்போருக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் புகாா்கள் வந்தன.

இதையொட்டி, காரைக்கால் தெற்கு மற்றும் வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் நேரடியாக இந்தப் பகுதிகளை கண்காணிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதில், கடந்த 12, 13 ஆகிய 2 நாள்களில், மூடப்பட்டுள்ள இடங்களில் சமூகக் கேடான செயல்களில் ஈடுபட்டதாக 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 12 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

காவல் துறையினா் இதுபோன்ற கண்காணிப்பை தீவிரமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் மது அருந்துவது மற்றும் சமூகக் கேடான பிற செயல்கள் நீடித்தால், சம்பந்தப்பட்டோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com