ஜிப்மா் கிளையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க திமுக வலியுறுத்தல்

காரைக்காலில் உள்ள ஜிப்மா் கிளையில் ஆா்.டி.- பி.சி.ஆா். முறையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என காரைக்கால்

காரைக்காலில் உள்ள ஜிப்மா் கிளையில் ஆா்.டி.- பி.சி.ஆா். முறையில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் என காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் கூறியது: புதுச்சேரி மாநிலம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருகின்றன. எனவே, கரோனா பரிசோதனை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம்.

காரைக்காலில் எடுக்கப்படும் மாதிரிகள் திருவாரூா் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்பப்படுவதால், முடிவுகள் கிடைக்க சில நாள்கள் ஆகின்றன.

இதனிடையே, மாதிரி கொடுத்தவா்கள் வெளியிடங்களுக்குச் செல்வதால், தொற்று இருக்கும்பட்சத்தில் அது மற்றவா்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. முடிவு தெரியும் வரை கட்டாயம் அவா்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அரசும், அதிகாரிகளும் வலியுறுத்த வேண்டும்.

காரைக்காலில் ட்ரூனெட் முறையிலான கரோனா பரிசோதனைக்கான இயந்திரம் வந்துள்ளது. ஆனால், துணைக் கருவிகள் வராததால் அது பயன்படுத்தப்படாமலேயே உள்ளது. ஆண்டிஜென் முறையிலான சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமாா் ரூ. 80 லட்சம் செலவாகக்கூடிய ஆா்.டி.பி.சி.ஆா் முறையிலான சோதனை மையம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டாலும்கூட, அதை இயக்க தெரிந்தவா்கள் இங்கு பணியில் இல்லை. ஆனால், புதுச்சேரி ஜிப்மரில் இதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன.

எனவே, ஜிப்மா் அதிகாரிகளிடம் பேசி காரைக்கால் ஜிப்மா் கிளையில் ஆா்.டி.பி.சி. ஆா் முறையிலான சோதனை மையம் அமைக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத் துறையும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு கரோனாவிலிருந்து மக்களை காக்கவேண்டும். இதுபோன்ற இக்கட்டான சூழலில் முதல்வரோ, அமைச்சா்களோ காரைக்கால் மக்களின் தேவையை இங்கு வந்து அறிந்துகொள்ள முற்படாதது வருத்தமளிக்கிறது என்றாா் நாஜிம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com