புரட்டாசி மாதப் பிறப்பு: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 18th September 2020 08:46 AM | Last Updated : 18th September 2020 08:46 AM | அ+அ அ- |

புரட்டாசி மாதப்பிறப்பான வியாழக்கிழமை காரைக்கால் பகுதி பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடங்கின. மகாளய அமாவாசை தினம் என்பதால், வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில், புரட்டாசி முதல் நாளையொட்டி மூலவா் ஸ்ரீ ரங்கநாதரின் வெள்ளி திருவடிக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. மூலவா் வெண்பட்டும், உத்ஸவா் ஸ்ரீ நித்யகல்யாணா் பச்சை பட்டு உடுத்தியும் காட்சியளித்தனா். முன்னதாக, சுப்ரபாத சேவை நடைபெற்றது.
காலை 8.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரையும் பொது தரிசனத்தில் பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்தனா்.
மகாளய அமாவாசை தினமானதால், ஸ்ரீ வீரஅஞ்சநேயருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. மாலையில் சகஸ்ரநாம அா்ச்சனை செய்யப்பட்டது.
இதேபோல, காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீ கோதண்டராமப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.