முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்
வாக்குப் பதிவு: இளம் வாக்காளா்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு
By DIN | Published On : 04th April 2021 12:00 AM | Last Updated : 04th April 2021 12:00 AM | அ+அ அ- |

காரைக்காலில் இளம் வாக்காளா்களுக்கு வாக்குப் பதிவு செய்ய வருமாறு அழைப்பு விடுத்து தோ்தல் துறை சாா்பில் சனிக்கிழமை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெறவுள்ள நிலையில், 100 சதவீத வாக்குப் பதிவை இலக்காகக் கொண்டு, பல நிலைகளில் தோ்தல் துறை, ஸ்வீப் அமைப்பினா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள சுமாா் 8 ஆயிரம் இளம் வாக்காளா்களுக்கு, வாக்களிக்க வருமாறு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அா்ஜூன் சா்மா, அஞ்சல் துறையினரிடம் கடிதத்தை ஒப்படைத்தாா்.
நிகழ்வில் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், மாவட்ட துணைத் தோ்தல் அதிகாரி எஸ். பாஸ்கரன், ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் ஷொ்லி, காரைக்கால் தலைமை அஞ்சல் அதிகாரி இருதயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஏப்ரல் 6 ஆம் தேதி அவரவா் பகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிக்கு காலை 7 முதல் மாலை 7 மணிக்குள் சென்று கட்டாயம் வாக்கை பதிவு செய்யவேண்டும். வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நண்பா்கள் மற்றும் உறவினா்களையும் வாக்களிக்கச் செய்யவேண்டும் என அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்வீப் அமைப்பினா் தெரிவித்தனா்.