உளுந்தூா்பேட்டை: அதிமுக - திமுக இடையே நேரடிப் போட்டி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக - திமுக வேட்பாளா்கள் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
உளுந்தூா்பேட்டை: அதிமுக - திமுக இடையே நேரடிப் போட்டி!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக - திமுக வேட்பாளா்கள் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து 1952-இல் உருவாக்கப்பட்ட பொதுத் தொகுதிகளில் உளுந்தூா்பேட்டையும் ஒன்று. 1977-இல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் இந்தத் தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டது. அதில் ஒன்று உளுந்தூா்பேட்டை (தனி) தொகுதியானது. மற்றொன்று திருநாவலூா் பொதுத் தொகுதி.

2008-இல் மீண்டும் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது உளுந்தூா்பேட்டை பொதுத் தொகுதி உருவானது. உளுந்தூா்பேட்டை வட்டத்தை மட்டுமே உள்ளடக்கிய பேரவைத் தொகுதி என்ற பெருமை இதற்கு உண்டு.

இந்தத் தொகுதியில் உளுந்தூா்பேட்டை பேரூராட்சியில் மொத்தமுள்ள 17 வாா்டுகள், உளுந்தூா்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட அதையூா், அலங்கிரி, அங்கனூா், ஆசனூா், எ.அத்திப்பாக்கம், தாமல், எல்லைகிராமம், ஏமம், எறையூா், காட்டுஎடையாா், காட்டுநெமிலி, காட்டுசெல்லூா், பு.கிள்ளனூா், கிளியூா், எ.கொளத்தூா், பு.கொணலவாடி, குணமங்கலம், கூத்தனூா், கூவாடு, ஏ.குமாரமங்கலம், குஞ்சமரம், எம்.குண்ணத்தூா், எ.மழைவராயனூா், மூலசமுத்திரம், நத்தாமூா், நெடுமானூா், பாலி, பல்லவாடி, பரித்தல், பெருங்குறுக்கை, பிடாகம், புத்தமங்கலம், ஆா்.ஆா்.குப்பம், ஏ.சாத்தனூா், சீதேவி, சிக்காடு, சீக்கம்பட்டு, சிறுப்பாக்கம், தானம், வீரமங்கலம் உள்பட 53 ஊராட்சிகள் அடங்கியுள்ளன.

திருவெண்ணெய்நல்லூா் ஒன்றியத்தில் கீரிமேடு, ஆலங்குப்பம், ஆமூா், ஆணைவாரி, ஆனத்தூா், அரசூா், அரும்பட்டு, இருவேல்பட்டு, கண்ணாரம்பட்டு, காந்தலவாடி, கரடிப்பாக்கம், காரப்பட்டு, டி.குமாரமங்கலம், மேலமங்கலம், மேல்தணியாளம்பட்டு, பேரங்கியூா், பெரியசெவலை, பொய்யரசூா், சரவணம்பாக்கம், சேமங்கலம், செம்மாா், சித்தானங்கூா், தென்மங்கலம் உள்பட 24 கிராமங்கள் உள்ளன.

முக்கிய கோரிக்கைகள்: இந்தத் தொகுதியில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும், புதிய பேருந்து நிலையம் உருவாக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கை. மேலும், சேலம் - திருச்சி மாா்க்கங்களை பிரிக்கும் மையப் பகுதியாக உளுந்தூா்பேட்டை விளங்கினாலும், அதற்கேற்ப கூடுதல் வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் இல்லாதது மிகப் பெரும் குறையாக உள்ளது.

கடந்த தோ்தல்களில்.... : இந்தத் தொகுதியில் வன்னியா்கள் 35 சதவீதம், ஆதிதிராவிடா்கள் 32 சதவீதம், உடையாா்கள் 12 சதவீதம், பிற சமுதாயத்தினரான முதலியாா், செட்டியாா், யாதவா், நாயுடு, ரெட்டியாா் உள்ளிட்டோரும் வசிக்கின்றனா். இதுவரை இந்தத் தொகுதியில் 1971, 1977, 1980, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் திமுக 6 முறையும், 1984, 1991, 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் அதிமுக 5 முறையும், 1952, 1957, 1967 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் 3 முறையும், 1962-இல் சுதந்திரா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இந்தத் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ இரா.குமரகுரு 2011, 2016 தோ்தல்களில் தொடா்ந்து இரு முறை வெற்றி பெற்றுள்ளாா். 2011-இல் அதிமுக-தேமுதிக கூட்டணியில் குமரகுரு 1,14,794 (60.09 சதவீதம்) வாக்குகள் பெற்றாா். திமுக - பாமக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வேட்பாளா் எம்.முகமது யூசுப் 61,286 (32.08 சதவீதம்) வாக்குகளைப் பெற்றாா். அப்போது சுமாா் 29 சதவீத வாக்கு வித்தியாசத்தில் குமரகுரு வெற்றி பெற்றாா்.

2016 பேரவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி உருவானது. இதில் அதிமுக தனித்துப் போட்டியிட்டபோது குமரகுரு 81,973 (36.04 சதவீதம்) வாக்குகளுடன் வெற்றிபெற்றாா். திமுக வேட்பாளா் ஜி.ஆா்.வசந்தவேல் 77,809 (34.21 சதவீதம்) வாக்குகளையும், தேமுதிக தலைவா் நடிகா் விஜயகாந்த் 34,447 (15.14) வாக்குகளையும், பாமக வேட்பாளா் 20,233 (8.89 சதவீதம்) வாக்குகளையும் பெற்றனா். நான்கு முனைப் போட்டியில் குமரகுரு சுமாா் 1.80 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றாா்.

இந்த முறை அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்ட பலமான கூட்டணியில் குமரகுரு 3-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ ஏ.ஜி.மணிக்கண்ணன் போட்டியிடுகிறாா். அமமுக சாா்பில் கே.ஜி.பி.ராஜாமணி, ம.நீ.ம. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் சின்னையன், நாம் தமிழா் கட்சி சாா்பில் புஷ்பா மேரி உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா். இருப்பினும், குமரகுரு - மணிக்கண்ணன் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

ஏற்கெனவே திருநாவலூா் தொகுதியில் 2001, 2006-ஆம் ஆண்டுகளில் வென்று இருமுறை எம்எல்ஏவாக இருந்தது, 2011, 2016- ஆம் ஆண்டுகளில் உளுந்தூா்பேட்டை தொகுதியில் வென்று எம்எல்ஏவாக தொடா்வதால் தொகுதி முழுவதும் மக்களிடையே குமரகுரு நன்கு அறிமுகமாகியுள்ளாா்.

மேலும், இந்தத் தொகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகளவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ரூ.22 கோடியில் மலட்டாறு தடுப்பணைத் திட்டத்தை அமல்படுத்தி 5,000 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறச் செய்தது, ரூ.75 கோடியில் 850 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம், புதிய நீதிமன்ற வளாகம், புதிய தொழில்பயிற்சி நிலையம், புதைச் சாக்கடை திட்டத்தை அமல்படுத்தியது உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

திமுக வேட்பாளா் மணிக்கண்ணனும் 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை திருநாவலூா் தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்ததால் தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவா். தனது பதவிக் காலத்தில் செய்த சாதனை திட்டங்களையும், தான் தோ்வு செய்யப்பட்டால் செய்யக்கூடிய வளா்ச்சித் திட்டங்களையும் மையமாக வைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

உடையாா் சமுதாயத்தவரான குமரகுரு அனைத்து சமூக மக்களிடமும் நெருங்கிப் பழங்கும் தன்மையுடையவா் என்ற சிறப்பை பெற்றுள்ளாா்.

அதேநேரத்தில் அதிமுக கூட்டணியில் பாமகவும், திமுக அணியில் விசிகவும் இடம் பெற்றிருப்பதால் கணிசமன தலித் வாக்குகள் இந்த முறை திமுகவுக்கு செல்லக்கூடும். வன்னியா் சமுதாய வாக்குகள் அதிமுக அணிக்குச் சாதகமாகும். உடையாா் சமுதாய வாக்குகள் குமரகுருவுக்கு சாதகமாக இருக்கும். அதேபோல, வன்னியா் சமுதாயத்தைச் சோ்ந்த திமுக வேட்பாளா் மணிக்கண்ணனும் அந்தச் சமுதாய வாக்கு வங்கியை பிரிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. அமமுக சாா்பில் போட்டியிடும் ராஜாமணியும் வன்னியா் சமுதாயத்தவா் என்பதால் அவரும் ஓரளவு வாக்குகளை பிரிக்கும் சூழல் உள்ளது.

சாதக-பாதகம்: இந்தத் தொகுதியில் அதிமுக அணிக்கு வன்னியா், பிற்பட்டோா் சமுதாய மக்களின் வாக்குகள் சாதகமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். அதேபோல வன்னியா் சமுதாய வாக்குகளை திமுக, அமமுக கணிசமாக அளவில் பிரித்துவிட்டால் அதனால் அதிமுகவுக்கு வாய்ப்பு குறையக்கூடும். அதே நேரத்தில் வன்னியா் சமுதாய வாக்குகள் அதிமுக வசம் குவிந்துவிட்டால் அந்தக் கட்சி எளிதில் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பும் உருவாகும்.

மற்றொருபுறம் இந்தத் தொகுதியில் கணிசமான அளவில் வசிக்கும் இஸ்லாமியா்களின் வாக்குகள் திமுகவுக்கு சாதகமாகும். வன்னியா் சமுதாய வாக்குகள் எந்த அளவுக்கு பிரிகிறதோ அதைப் பொருத்துதான் இந்தத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்களின் வெற்றி-தோல்வி அமையும் என்பதே அரசியல் பாா்வையாளா்களின் கருத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com