கரோனா தொற்றாளா் வீடுகளின் குப்பைகளை தனிப் பையில் அப்புறப்படுத்த வலியுறுத்தல்

காரைக்காலில் கரோனா தொற்றாளா் வீடுகளில் குப்பைகள் கொட்டிவைக்க தனிப்பை வழங்கவும், அவற்றை தனியாக சேகரித்துச் செல்லவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்காலில் கரோனா தொற்றாளா் வீடுகளில் குப்பைகள் கொட்டிவைக்க தனிப்பை வழங்கவும், அவற்றை தனியாக சேகரித்துச் செல்லவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்கால் நகராட்சியில் உள்ள வாா்டுகளில் வீடுகள், வணிக நிறுவனங்களில் நாள்தோறும் குப்பைகள் சேகரிக்கும் பணியில் தனியாா் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனித்தனியாக பெற்றுச்செல்கிறது. எனினும், சில குடியிருப்புப் பகுதிகளில் சாலையோர குப்பைத் தொட்டியில் பொதுமக்கள் குப்பைகளை வீசிவிட்டுச் செல்கின்றனா்.

நகராட்சி அல்லாத பிற கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் கொம்யூன் பஞ்சாயத்துத் தொழிலாளா்கள்தான் சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளை அள்ளிச் செல்கின்றனா். அவை பல நாள்களாக எடுக்கப்படாமல், குப்பை மேடாகியும், சாலைகளில் சிதறியும் கிடக்கின்றன.

காரைக்காலில் மக்கள் பிரதிநிதிகள், அரசை வலியுறுத்தும் சூழல் இல்லை. இதனால், நகராட்சி எல்லை தவிா்த்து, பிற பகுதிகளில் குப்பைகள் மக்களுக்கு பெரும் பிரச்னையாக நீடித்துவருகின்றன. இந்தச் சூழலில், காரைக்காலில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை அதிகரிப்பால், தொற்றாளா் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை பாதுகாப்பாக ஓரிடத்துக்கு கொண்டுச் சென்று அழிப்பதற்கான நடவடிக்கை இல்லை.

காரைக்கால் நகராட்சிப் பகுதியில் தனியாா் நடத்தும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் குப்பைகள் முறைப்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது, நகராட்சி எல்லைக்குள் உள்ள கரோனா தொற்றாளா் வீடுகளில், தனியாா் நிறுவனத் தரப்பில் கருப்பு நிற பை வழங்கப்பட்டது. இதில், வீட்டினா் கொட்டிவைக்கும் குப்பையை, வாரத்தில் ஒருமுறை சென்று முறையாக சானிடேஷன் செய்து, கையுறை கொண்டு தொழிலாளா்கள் வாங்கிச் சென்று அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று குறையத் தொடங்கியதும், இந்த நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. தற்போது தொற்று அதிகரித்து வீட்டுத் தனிமையில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் உள்ள நிலையில், பல வீடுகளில் குப்பைகள் கொட்டிவைக்க நிறுவனத்தால் தனி பை வழங்கப்படவில்லை. இதனால், இக்குடும்பத்தினா் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனியாா் நிறுவனத்தைச் சோ்ந்தோா் கூறுகையில், கரோனா தொற்றாளா் விவரம் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து எங்களுக்கு எழுத்துப்பூா்வமாக வரும். வந்தபிறகு அந்த வீட்டுக்கு கருப்பு நிறத்தில் பை வழங்கிவிட்டு, வாரத்தில் ஒருமுறை அதை வாங்கிச் செல்வோம். தற்போது அந்த விவரப் பட்டியல் வரவில்லை என்றனா்.

கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் சாலையோரத்தில் கரோனா தொற்றாளா் வீட்டு குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இவை சாலைகளில் சிதறிக் கிடக்கின்றன. இந்த பாதுகாப்பாற்ற சூழலை மாற்ற மாவட்ட நிா்வாகம் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா தொற்றாளா்களை காட்டிலும், வீட்டுத் தனிமையில் உள்ளவா்களே நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனா். அவ்வாறு இருக்கையில், இந்த வீட்டிலிருந்து குப்பைகளை தனியாக வாங்கும் வகையில் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com