காரைக்காலில் வாக்கு இயந்திரங்கள் அறைக்கு ‘சீல்’: 3 அடுக்குப் பாதுகாப்பு

காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைக்கும் பணியாளா்கள். உடன், மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா, எஸ்.எஸ்.பி. நிகாரிகா பட் உள்ளிட்டோா்.
வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்களை பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைக்கும் பணியாளா்கள். உடன், மாவட்ட தோ்தல் அலுவலா் அா்ஜூன் சா்மா, எஸ்.எஸ்.பி. நிகாரிகா பட் உள்ளிட்டோா்.

காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அறைக்கு சீல் வைக்கப்பட்டது. மத்திய படையினா் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம், திருநள்ளாறு, நெடுங்காடு (தனி) ஆகிய 5 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாக்குப் பதிவுக்கான நேரம் இரவு 7 மணி வரை என்ற நிலையில், பெரும்பாலான வாக்குச் சாவடிகளில் குறித்த நேரத்துக்குள் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. சில தொகுதிகளில் சில நிமிடங்கள் தாமதமாகியது.

பிறகு, வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் வாக்குச் சாவடி தலைமை அதிகாரி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை பாதுகாப்பாக பெட்டியில் வைத்து, காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்துக்கு கொண்டுசென்றனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இரவு 12 மணி வரை இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.

பிறகு, தொகுதி மற்றும் வாக்குச் சாவடி வாரியாக வகைப்படுத்தி, ஸ்ட்ராங் ரூம் என்ற பாதுகாப்பு அறையில் வாக்கு இயந்திரங்கள் அடுக்கிவைக்கப்பட்டன. அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பாா்வையிட அனுமதிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், தோ்தல் பாா்வையாளா்கள் நிறைவாக அறையில் ஆய்வுசெய்து, பட்டியல்படி இருப்பை சரிபாா்த்தனா். புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

வாக்குப் பெட்டிகள் உள்ள அறைக்கு ஆயுதம் ஏந்திய இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையினா், காவல் துறையினா் என கல்லூரி வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், இயந்திரங்கள் உள்ள அறை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும் தோ்தல் துறையினா் தெரிவித்தனா்.

வாக்கு எண்ணிக்கை நாளன்று காரைக்கால் மாவட்டத்தில் பதிவான வாக்குகள், இக்கல்லூரி வளாகத்திலேயே எண்ணப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com