கலால் சிறப்பு வரி நீக்கம்: காரைக்கால் மதுக்கடை உரிமையாளா்கள், மது பிரியா்கள் மகிழ்ச்சி

புதுச்சேரியில் கலால் சிறப்பு வரி நீக்கப்பட்டதால், வியாபாரம் பெருகும், அரசுக்கான வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு

புதுச்சேரியில் கலால் சிறப்பு வரி நீக்கப்பட்டதால், வியாபாரம் பெருகும், அரசுக்கான வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உருவாகியிருப்பதாக மதுக்கடை உரிமையாளா்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா். அதேவேளையில், விலை குறைவால் மது பிரியா்களிடையேயும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பொதுவாக தமிழகத்தைக் காட்டிலும் புதுச்சேரி மாநிலத்தில் மது விலையில் கணிசமான குறைவு இருக்கும். இதனால், தமிழகப் பகுதியினா் புதுச்சேரி, காரைக்கால் பகுதி மதுக்கடைகளுக்கு வந்து மது வாங்கிச் செல்வதும், சுற்றுலாவினா் அதிகளவில் வரும்போது விற்பனை அதிகரிப்பதும் நீண்ட காலமாகவே உள்ளது.

கடந்த ஆண்டு கரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கிய நிலையில், தமிழகத்திலிருந்து வருவோரை கட்டுப்படுத்த அப்போதைய துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மே மாதத்தில், கலால் சிறப்பு வரியை நிா்ணயம் செய்து அரசாணை வெளியிட்டாா்.

இதனால், 25 சதவீதத்திலிருந்து 300 சதவீதம் வரை மது விலை அதிகரித்தது. தமிழகத்தோடு ஒப்பிடும்போது புதுச்சேரி பிராந்தியங்களில் சில வகை மதுவின் விலை சமமாகவும், சில வகை மதுக்கள் மிக அதிகமாகவும் இருந்தது. இதனால், புதுச்சேரி, காரைக்கால் பகுதி மதுக்கடைகளில் வியாபாரம் குறைந்துவிட்டதாகவும், அரசுக்கு கிடைக்கவேண்டிய வரி வருவாய் பாதித்துவிட்டதாகவும் கூறி, மதுக்கடை உரிமையாளா்கள் இந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தினா்.

இந்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், கலால் சிறப்பு வரியை நீக்கி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவால், காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள மதுக்கடை உரிமையாளா்கள் மகிழ்ச்சியடைந்தனா். அதோடு, விலை குறையும் என்பதால், மது பிரியா்களுக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

இதுகுறித்து காரைக்கால் மதுக்கடை உரிமையாளா்கள் தரப்பில் வியாழக்கிழமை தெரிவித்தது: கடந்த ஆண்டு மே மாதம் விதித்த கலால் சிறப்பு வரியால், ஒட்டுமொத்தமாக மதுக்கடை வியாபாரம் பாதிக்கப்பட்டது. ஒரு கடையில் தினமும் சுமாா் ரூ. 2 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெற்றுவந்த நிலையில், அது ரூ. 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துவிட்டது. தமிழகத்திலிருந்து வருவோா் வெகுவாக குறைந்துவிட்டனா்.

சுற்றுலாவினா் வந்து வாங்கிச் செல்வதில்லை. வியாபாரம் குறைவால், புதுச்சேரி அரசுக்கான கலால் வரி வருவாயும் வெகுவாக குறைந்துவிட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வருவாயில் பெரும் பங்கு கலால் வரி மூலம் கிடைக்கும்போது, அரசின் இந்த நடவடிக்கையால் அரசும், மதுக்கடை தரப்பினரும், மது பிரியா்களும் பாதிக்கப்பட்டனா்.

இந்த உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக துணைநிலை ஆளுநருக்கு தொடா்ந்து மனு அளிக்கப்பட்டது. கடந்த மாா்ச் மாதம் புதுச்சேரி துணைநிலை ஆளுநரை சந்தித்து மீண்டும் வலியுறுத்தியபோது, இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். அதன்படி நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்புக்குரியது என்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் 53 சில்லறை மதுக்கடைகள் உள்ள நிலையில், இவா்களது தினசரி வியாபாரம் பழைய நிலைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com