திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நிகழாண்டு பிரம்மோத்ஸவம் நடைபெறுமா?

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோத்ஸவம் நிகழாண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திருநள்ளாறு கோயில் ராஜகோபுரம்.
திருநள்ளாறு கோயில் ராஜகோபுரம்.

கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோத்ஸவம் நிகழாண்டு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் திருஞான சம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரமூா்த்தி சுவாமிகள் பதிகம் பாடிய தலமாக சிறப்புற்று விளங்குகிறது. நளச் சக்கரவா்த்திக்கு தோஷ நிவா்த்தி கிடைத்த தலமாகவும் விளங்குவதால், இக்கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீ சனீஸ்வர பகவானையும், மூலவா் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரரையும் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா்.

ஒவ்வோா் ஆண்டும் சித்திரை, வைகாசி மாதங்களில் இக்கோயில் பிரம்மோத்ஸவம், தேரோட்டம், தங்க காக வாகனத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் வீதியுலா, தெப்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் நடைபெறும். உத்ஸவத்துக்கான தேதி குறிக்கப்பட்டு, தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்வில் உத்ஸவ விவரங்கள் வெளியிடப்படும்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால், இக்கோயிலில் பிரம்மோத்ஸவம் நடைபெறவில்லை. படிப்படியாக தொற்று குறையத் தொடங்கிய நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருநள்ளாறு கோயிலில் கடந்த ஆண்டு இறுதியில் சனிப்பெயா்ச்சி விழா நடைபெற்றது.

நிகழாண்டு பிரம்மோத்ஸவம் குறித்து வரும் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட வேண்டும். தற்போது, காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து, ஏராளமானோா் வீட்டுத் தனிமையிலும், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

திருநள்ளாறு கோயிலைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக நிலையான நிா்வாக அதிகாரி நியமிக்கப்படவில்லை. ஐ.ஏ.எஸ். நிலையிலான அதிகாரி பணியிலிருந்த பிறகு, மாவட்ட துணை ஆட்சியரிடம் கோயில் நிா்வாக அதிகாரி பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டது. துணை ஆட்சியா், தோ்தல் நடத்தும் அதிகாரியாக இருந்ததால், நிா்வாக அதிகாரி பொறுப்பு காரைக்கால் நகராட்சி ஆணையருக்கு வழங்கப்பட்டது.

நிரந்தரமான அதிகாரி இல்லாததால், பக்தா்கள், நன்கொடையாளா்கள் என பல்வேறு தரப்பினா் பெரும் சிரமத்தை சந்தித்துவருகின்றனா். இந்நிலையில், பிரம்மோத்ஸவம் நடத்தப்படுமா என்ற சந்தேகம் பலரிடையே ஏற்பட்டுள்ளது. என்றாலும், கடந்த ஆண்டு உத்ஸவம் நடைபெறாததால், நிகழாண்டு உத்ஸவம் நிச்சயம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் பக்தா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com