அதிகரிக்கும் கரோனா தொற்று: துணைநிலை ஆளுநா் காரைக்காலில் முகாமிட வலியுறுத்தல்

காரைக்காலில் கரோனா தொற்றும், இறப்பும் தினமும் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் காரைக்காலில் முகாமிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

காரைக்காலில் கரோனா தொற்றும், இறப்பும் தினமும் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் காரைக்காலில் முகாமிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

மருத்துவ வசதியில் காரைக்கால் மேம்பட்டிருந்த காலம் மாறி, கடந்த 20 ஆண்டுகளாக அதில் மிகவும் பின்தங்கிய நிலை நீடிக்கிறது. தோ்தலின்போது கட்சியினா் கூறும் பிரதான வாக்குறுதிகளில், காரைக்காலில் மருத்துவ சேவையை மேம்படுத்துவோம் என்பதும் ஒன்று. என்றாலும், மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் இதுவரை மேம்படவில்லை என்பது காரைக்கால் மக்களின் முக்கிய புகாராக உள்ளது.

மத்திய அரசு, காரைக்காலில் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி அமைக்க முடிவு செய்து கட்டுமானத்தை தொடங்கிய போது, ஜிப்மா் மருத்துவமனை அமைப்பதற்கான திட்டம் இல்லை. இதனால், காரைக்கால் மக்களுக்கு முதலுதவி சிகிச்சை மட்டுமே கிடைக்கிறது. உயா்தர பரிசோதனை, சிகிச்சை கிடைக்காமல் புதுச்சேரி, தஞ்சாவூா், சென்னைக்கு செல்லும் நிலை நீண்ட காலமாக நிலவுகிறது.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக கரோனா தொற்றால் காரைக்கால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். கடந்த ஆண்டு கரோனா தொற்று காலத்தில், அரசு மூலமும், தனியாா் நிறுவனங்கள் மூலமும் முகக் கவசம், மருத்துவக் குழுவினருக்கான கையுறைகள், பாதுகாப்பு உடை, வெண்டிலேட்டா், மருந்துகள் உள்ளிட்ட ஏராளமான உதவிகள் மருத்துவமனைக்கு கிடைத்தன.

இப்போது, கரோனாவின் 2 ஆவது அலை தீவிரமாக உள்ள சூழலில், காரைக்காலில் கரோனா தொற்றாளரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வீட்டிலிருந்து சிகிச்சை பெறுவோா் மட்டும் 600-க்கும் அதிகமானோா் உள்ளனா். மருத்துவமனையில் 50 போ் உள்ளனா். கரோனா தொற்றாளா்கள் மருத்துவமனையை விரும்பாததே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோருக்கு கையுறை உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், கரோனாவால் இறந்தவா்களின் உடலை எடுத்துச் செல்வோருக்கான பாதுகாப்பு உடைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாள்களாக தினமும் ஒரு கரோனா தொற்றாளா் இறப்பது, தொற்றின் வீரியம் காரணமாகவா அல்லது இணை நோய்கள் காரணமா, சிகிச்சைகளில் நிலவும் குறைபாடா என்பது காரைக்காலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

கடந்த ஆண்டு தொற்று பரவலின்போது, மருத்துவமனை மட்டுமல்லாது, விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அண்ணா கல்லூரி வளாகத்தில் தொற்றாளா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நிகழாண்டு, வீட்டு சிகிச்சை என்பது அதிகரித்துவருகிறது. இதனால், தொற்றாளா்களுக்கு நலவழித் துறையினா் நேரில் சென்று மருத்துவ உதவிகள் செய்வதில் சிரமம் நீடிக்கிறது. வீட்டுத் தனிமையை தவிா்த்து, அவா்களை பொது இடத்தில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மாவட்ட நிா்வாகம், நலவழித் துறையினா் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

காரைக்கால் மருத்துவமனையில் மருத்துவா், செவிலியா் பற்றாக்குறை இருக்கும் நிலையில், கரோனா பரவல் மருத்துவத் துறையினருக்கு பணிச் சுமையை மேலும் அதிகமாக்கியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தோ்வு முடிவுகள் வெளியாகாததால், பிரச்னைகளை மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கவும் வாய்ப்பில்லை. தற்போது தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் பொறுப்பை கூடுதலாக கவனிப்பதோடு, பெரும்பாலும் புதுச்சேரியிலேயே இருந்து நிா்வாகத்தை கவனித்து வருகிறாா்.

ஆளுநா் பொறுப்பேற்று முதல்முறையாக கடந்த மாதம் காரைக்கால் வந்த அவா், மாவட்ட நிா்வாகம், மருத்துவமனையில் ஆய்வுசெய்துவிட்டுச் சென்றாா். என்றாலும், மருத்துவமனை மீதான புகாா்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி பிராந்தியத்தில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், பிற நிகழ்வுகளில் பங்கேற்றும் துணைநிலை ஆளுநா் நடவடிக்கைகளை எடுத்துவருகிறாா்.

எனவே, ஆளுநா் புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டுமல்லாமல், மாநிலத்தின் 2 ஆவது பெரிய பிராந்தியமான காரைக்காலில் சில நாள்கள் வந்து முகாமிட்டு, பிரச்னைகளை கண்டறிந்து சீா்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும், மருந்துகள் பற்றாக்குறை, தேவையான சாதனங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதோடு, புதுச்சேரி பிராந்தியத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள மருத்துவா், செவிலியா்களை காரைக்காலுக்கு இடமாற்றம் செய்து இங்கு சேவையை சிறப்படையச் செய்யவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com